அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, எங்கு இருந்தாலும் நம் முடைய பணியை நாம்தான் செய்யவேண்டும். அதுவும் சிறப்புற செய்தால், நம்முடைய மதிப்பும் மரியாதையும் உயரும். பணியை தொய்வின்றி செய்து முடிக்கவும், அலுவலக வாழ்க்கையில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்கவும் சில யோசனைகளை பகிர்ந்திருக்கிறோம். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கான நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.
1. அதிகாலையில் எழுந்திருக்கப் பழகுங்கள். உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக தினசரி உடற்பயிற்சிகளை செய்துவிட்டு அன்றைய தினத்தை ஆரம்பியுங்கள். அன்றைய அலுவலக வேலையை கவனமுடன் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு உடற்பயிற்சி கைகொடுக்கும்.
2. உங்கள் வேலைகளை முதலில் திட்டமிடுங்கள். இது கேட்பதற்கு மிகவும் பழைய யோசனை போலத் தெரியலாம். ஆனால் திட்டமிடாத வேலை சிறக்காது. ஒரு தொழில் முனைவோர் என்றால் முடிவுகளை எடுக்க வேண்டும். தினசரி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நிதி தொடர்பான காகிதங்களை சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற வேலைகளை சரிவர முடிக்க திட்டமிடுதல் அவசியம். எனவே திட்டமிட மறக்காதீர்கள்.
3.எந்த வேலையை உடனடியாகச் செய்ய வேண்டும்; எந்த வேலையை சற்று நிதானமாகச் செய்யலாம் என்பதை இனம் கண்டுகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். இல்லையென்றால், தேவையற்ற வேலைகளில் உங்களின் பெரும் ஆற்றலை செல வழிக்க நேரிடும்.
MUST READ
4. நீங்கள் வேலையில் இருக்கும்பொழுது கவனச் சிதறலுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். கதை புத்தகம் படிப்பது, வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்புவது, மின்னஞ்சலை எடுத்துப்பார்ப்பது என்று நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிக்கும் நேரங்கள் உங்கள் வேலைத் திறனில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
5. உங்கள் அலைபேசி அல்லது மடிக்கணினியில் இருக்கும் நாட்காட்டியில் தினசரி செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலைகளை முன்கூட்டியே குறித்துவைத்துக் கொள்ளுங்கள். குறித்துவைப்பதோடு மட்டுமல்லாமல் அதை அவ்வப்பொழுது எடுத்துப் பார்த்து உங்கள் வேலைகளை அந்தந்த நேரத்தில் முடியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் கடைசி நேரப் பரபரப்பைக் குறைக்க மிகவும் கைகொடுக்கும்.
6. தொழில் சார்ந்த கூட்டங்களை நாள்முழுக்க வளவளவென இழுத்துக்கொண்டே செல்லாதீர்கள். சுருக்கமாக அதே சமயம் மிகுந்த பயன் உள்ளதாக கூட்டங்களை நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்யவேண்டும்? யார் யாரெல்லாம் அதில் இணையப் போகிறார்கள் என்பது குறித்துத் தெளிவாகப் பேசினால் போதும்.
7. எல்லா வேலைகளையும் நீங்கள் ஒருவரே செய்தால் எந்த வேலையையும் உங்களால் முடிக்க முடியாது. அதனால் வேலைகளை திறமைமிக்க ஊழியர்களிடம் பிரித்துக்கொடுக்க மறக்காதீர்கள். நீங்கள் சிறுதொழில் முனைவோர் என்றால் வெளியிலிருந்து உங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் திறமைமிக்க மனிதர்களை கண்டறிந்து அவர்களிடம் உங்கள் வேலைகளைக் கொடுங்கள். கட்டணத்தின் பேரில் வேலைகளை செய்துகொடுக்க திறமைமிக்க நிறைய பேர் வெளியே காத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment