பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நடத்தப்பட இருந்த தேர்வை நடத்த தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிளஸ்-1 வகுப்பு
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி 9-ம் வகுப்பு இறுதித்தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிளஸ்-1 வகுப்பில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேருவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அவசியம். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது பற்றி அரசு ஆலோசித்துவருகிறது. இதற்கிடையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
பள்ளி அளவில் தேர்வு
அதில், ‘மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் (10-ம் வகுப்பு) இருந்து 50 வினாக்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளி அளவில் இதுபோன்று தேர்வு நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று அந்த சுற்றறிக்கையில் இந்த வழிகாட்டு நெறிமுறையை மட்டும் மாற்றி, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடத்த தேவையில்லை
அதன்படி, ‘மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு 10-ம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment