திறன் வாய்ந்த டிரைவர்களுக்கான பற்றாக்குறை மற்றும் சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் அதிகரிக்கும் விபத்துகள் போன்றவை இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
எனவே திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் டிரைவர்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க வேண்டியது இல்லை.
இந்த பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த விதிமுறைகள் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி இந்த பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக மாதிரிகள் (சிமுலேட்டர்கள்), பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி மாற்று மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், டிரைவிங் லைசென்சுக்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க தேவையில்லை. இதன் மூலம் லைசென்ஸ் வழிமுறைகள் எளிதாகும். இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படும்.
இந்த தகவல்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment