பல்வேறு காரணங்களால் முதல் தவணை கொரோனா நிவாரண உதவித்தொகையை வாங்க முடியாதவர்கள், அந்த தொகையை இந்த மாதம் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரண உதவித்தொகை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து, பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு வருகிற 7-ந் தேதி முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு, செயலாக்கத்தில் உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெற தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் வினியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக கடந்த 15-ந் தேதி முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம்
கடந்த 31-ந் தேதி (நேற்று) நிலவரப்படி இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித்தொகை பெற்று சென்றுள்ளனர். மீதம் உள்ள குடும்பங்களில் நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும், முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக ரேஷன் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித்தொகை பெற இயலவில்லை என அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை பெறும் வகையில், அந்த தொகையை ஜூன் (இந்த மாதம்) மாதத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும், முக கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும், சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்தில் இருந்து காத்துக்கொள்ளவும், நோய்த்தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment