2021 -உலகின் சிறந்த இளம் புகைப்படக் கலைஞர்!
╰•★★ Join Our WhatsApp ★★•╯
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு "உலகப் புகைப்படக்கலை நிறுவனம்'. அது ஒவ்வோராண்டும் சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான உலக அளவிலான போட்டிகளை நடத்தி விருதும் வழங்கி வருகிறது. "சோனி வேர்ல்டு போட்டோகிராபி அவார்ட் 2021' என்ற பெயரில் இந்த ஆண்டு உலக அளவிலான சிறந்த இளம் வயது புகைப்படக் கலைஞருக்கான விருதை அது வழங்கி இருக்கிறது. அந்த விருதை இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாகப் பெற்றிருக்கிறார். அவர் புபருன் பாசு.
கொல்கத்தாவைச் சேர்ந்த 20 வயதான புபருன் பாசு, தனது 4 வயதிலிருந்தே கேமராவும் கையுமாக இருந்திருக்கிறார்.
அவருடைய தந்தை பிரணாப் பாசு, கொல்கத்தாவில் உள்ள சிறந்த புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர். புகைப்படக் கலை தொடர்பான கேமராக்கள், கருவிகளின் நடுவே புபருன் பாசு வளர்ந்து வந்திருக்கிறார். இளம் வயதிலிருந்தே புகைப்படக் கலையில் ஆர்வமுடையவராக அவர் இருந்திருக்கிறார்.
""புகைப்படம் எடுப்பதை நான் சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். என்றாலும் என் அப்பா எனக்கு அது பற்றி எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை.
நானாகவே கற்றுக் கொண்டேன். நான்கு வயதில் முதன்முதலாக ஒரு புகைப்படம் எடுத்தேன். எனது 10 வயதில் எனக்கே சொந்தமான ஒரு கேமராவை என் அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார். எனது 16 வயதில் நான் எடுத்த புகைப்படம் ஒன்று,
"நேஷனல் ஜியாகரபிக் யுவர் ஷாட்' என்ற பகுதியில் இடம் பெற்றது. எனது புகைப்படம் பிபிசி வானொலியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டபோது எனக்கு வயது 17.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2019 - இல் நான் எடுத்த இரண்டு புகைப்படங்கள் கொல்கத்தா சர்வதேச புகைப்படத் திருவிழாவில் இடம் பெற்றன. சோனி போட்டோகிராபி அவார்ட் எனக்குக் கிடைத்தவுடன் புகழ்பெற்ற வெளிநாட்டு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அது பற்றிய செய்திகள் இடம் பெற்றன'' என்கிறார் மகிழ்ச்சியுடன் புபருன் பாசு.
கரோனா தொற்றின் காரணமாக வீட்டிலேயே எல்லாரும் முடங்கிக் கிடக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் புபருன் பாசு முடங்கிக் கிடக்கவில்லை. நியூயார்க்கில் உள்ள "மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்' நடத்தும் ஆன்லைன் புகைப்படக்கலை படிப்பில் சேர்ந்து படித்தார். அது புகைப்படக்கலை தொடர்பான அவருடைய அறிவை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.
""நான் இணையதளம் மூலமாகத்தான் இந்த வேர்ல்டு போட்டோகிராபி அவார்ட் பற்றி தெரிந்து கொண்டேன். இதற்கு முன்பு அது நடத்திய பல போட்டிகளில் நான் கலந்து கொண்டேன். ஆனால் நான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற புகைப்படங்களுக்கு அப்பால் வெகு தொலைவிலேயே இருந்தன. ஆனாலும் நான் மனம் தளரவில்லை. எப்படியும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.
இந்தப் புகைப்பட போட்டி ஒவ்வோராண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறிப்பிடும் கருப்பொருள் தொடர்பான மூன்று புகைப்படங்களை அனுப்ப வேண்டும். அப்படி உலகம் முழுவதும் பலர் அனுப்பிய புகைப்படங்களில் ஒன்று அந்த மாதத்தின் சிறந்த புகைப்படமாகத் தேர்வு செய்யப்படும்.
அந்த புகைப்படத்தை எடுத்தவர் அந்த மாதத்தின் சிறந்த புகைப்படக் கலைஞராக அறிவிக்கப்படுவார்.
அப்படி அந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர் அந்த ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்வு செய்யப்படுவார். அப்படித்தான் 2021 - ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த இளம்வயது புகைப்படக் கலைஞராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
கரோனா பாதிப்பின் காரணமாக லண்டனில் விழா நடத்த முடியாததால், ஆன்லைனிலேயே விழாவை நடத்தி பரிசையும் அனுப்பி வைத்துவிட்டனர்.
விலை உயர்ந்த மிர்ரர்லெஸ் கேமரா, சான்றிதழ், நினைவுப் பரிசு எல்லாம் அனுப்பி வைத்தார்கள்'' என்கிறார் புபருன் பாசு.
இந்த ஆண்டு இந்தப் போட்டிக்காக உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 30 ஆயிரம் புகைப்படங்கள் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அப்படி அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டதுதான் புபருன் பாசு எடுத்த புகைப்படம்.
""புகைப்படங்கள் எடுக்க பல்வேறு கருப்பொருள்களைப் பயன்படுத்தலாம். எனக்குப் பிடித்த கருப்பொருள் மனிதர்களும், சூரியன் மறைவதும்தான். ஹூக்ளி நதியருகே வடக்கு கொல்கத்தாவில் எனது வீடு உள்ளது. பலவிதமான மனிதர்கள், பலவிதமான வாழ்க்கைமுறை உடையவர்களைப் பார்க்கும் வாய்ப்பு இங்கே அதிகம். நான் இருக்கும் இந்தச் சூழலை நிறையப் புகைப்படங்களாக எடுத்து, ஆவணப்படுத்தும் முயற்சிகளில்தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஈடுபட்டு வந்தேன்.
ஆனால் கரோனா பாதிப்பு வீட்டை விட்டு வெளியே வராமல் என்னைத் தடுத்துவிட்டது. வீட்டிலிருந்தே நான் எடுத்த புகைப்படம் ஒன்றுக்குத்தான் இந்த விருது எனக்குக் கிடைத்திருக்கிறது.
ஒரு மாலை வேளையில் சூரிய வெளிச்சம் எங்கள் வீட்டு ஜன்னலில் பட்டு, திரைச்சீலைகளின் வழியாக ஊடுருவ முயற்சித்துக் கொண்டிருந்தது.
அதைப் புகைப்படமாக எடுக்கலாம் என்று நினைத்தேன். எனது அம்மாவை அழைத்து திரைச்சீலையின் அருகே கைகளை வைக்கும்படி சொன்னேன். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தேன். நிழலுருவாக காட்சி அளித்த அந்தப் புகைப்படத்துக்கு நான் வைத்த பெயர் "நோ எஸ்கேப் ஃபிரம் ரியாலிட்டி'.
சூரிய வெளிச்சத்தைத் திரைச்சீலை தடுப்பதைப் போன்றதுதான், கரோனா நோய்த்தொற்று உலகின் இயல்பான வாழ்க்கையைப் பாதிப்பது. திரைச் சீலையை அகற்றும் முயற்சியாகத்தான் அதில் என் அம்மாவின் கைகளை நான் வைக்கச் சொன்னது.
இந்தப் புகைப்படம் இந்தக் கருப்பொருளுக்காகத்தான் விருது பெற்றது'' என்கிறார் புபருன் பாசு.
""இப்போது எல்லாரும் புகைப்படக் கலைஞர்களாகிவிட்டனர். மொபைல் போனிலேயே புகைப்படங்களை எடுக்க முடிகிறது. நான் பயன்படுத்துவது டிஎஸ்எல்ஆர் கேமரா. புகைப்படக் கருவி எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது ஒரு புகைப்படக் கலைஞரின் படைப்பாற்றலுக்கு வேலி போட முடியாது.
புகைப்படக் கலைஞரின் திறமை, தேர்ந்தெடுக்கும் சிறந்த கருப்பொருள் ஆகியவைதான் சிறந்த புகைப்படங்களை உருவாக்குகின்றன. ஒரு புகைப்படக் கலைஞர் சிறந்த அழகியல் கண்ணோட்டத்துடன் ஒரு செல்லிடப் பேசியின் மூலமாக எடுக்கும் புகைப்படம் கூட மிகச் சிறந்த புகைப்படமாக ஆகிவிடும்'' என்கிறார் புபருன் பாசு.
No comments:
Post a Comment