இந்தியாவில் ஊரடங்கு காலகட்டத்தில்
செல்போன், கணினி பயன்படுத்திய 28 கோடி பேருக்கு கண்பார்வை பாதிப்பு
╰•★★ Join Our WhatsApp ★★•╯
நவநாகரிக உலகில் நாளுக்கு நாள் ஏற்படும் விஞ்ஞான வளர்ச்சிகள் மனித சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு பெருமளவு.
வியக்கத்தக்க வரவு
இதில் செல்போனின் வரவு வியக்கத்தக்கது. துள்ளிக்குதிக்கும் சுட்டிகள் முதல், தள்ளாடும் தாத்தா, பாட்டிகள் வரை அனைவரின் உள்ளங்களையும் கட்டிப்போட்டு வெற்றி கண்டிருக்கிறது.
இந்த செல்போன்கள் வரும்வரை மனித உறவுகள் தங்களுக்குள் பேசி மகிழ்ந்துகொள்ள தொலைபேசியையும், தகவல்களை பகிர்ந்துகொள்ள கடிதப்போக்குவரத்தையும் நம்பி இருந்தன. இந்த இரண்டின் பயன்பாடும் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன.
சாதாரண செல்போன்கள் வந்தபிறகு பேச மட்டுமே முடிந்தது என்ற நிலையில் ஒருவருக்கொருவர் நேரம் காலம் பார்க்காமலும், மணிக்கணக்கிலும் பேசி அளவளாவினர். ஆனால் ஸ்மார்ட் போன்கள் வந்தபிறகு பேசுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதைவிட செல்பி, போட்டோ, வீடியோ எடுத்து பார்த்து மகிழ்வது, இணையத்தில் ஊடுருவி சமூக வலைத்தளங்களில் சங்கமிப்பது என்று பிற விஷயங்களில் பயன்படுவதே அதிகமாகிவிட்டது.
அளவுக்கு மீறினால்...
இதனால் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் எந்த நேரமும் அதில் மூழ்கிக் கிடப்பதையே காண முடிகிறது. பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மட்டுமின்றி அரசு, தனியார் அலுவலகங்கள் என எங்கு நோக்கிலும் செல்போனில் பேசுவோரைவிட, அதை கண் இமைக்காமல் காண்போரே அதிகமாக தென்படுகிறார்கள். அந்த அளவுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இல்லை எனில் அது சில சமயங்களில் ஆபத்தில்கூட முடிந்துவிடும்.
அப்படியொரு நிலைமை இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டு இருக்கிறது. செல்போன், கணினி பயன்பாட்டில் இந்தியர்களே அதிகமாக ஈடுபடுவதாக புள்ளி விவரம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலக அளவில் செல்போன், கணினி பயன்பாடு அதனால் ஏற்படும் கண் பாதிப்பு குறித்து உலக சுகாதார மையமும், லேன்செட் குளோபல் என்ற அமைப்பும் சேர்ந்து நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியா முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண் பாதிப்பு
ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஒளி விலகல், கண் சிவத்தல், கண் வறட்சி, கண் அரிப்பு மற்றும் கண் புண் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தகவல்கள் ெதரிவிக்கிறது. இந்தியாவில் தினமும் ெசல்போன், கணினிகளை உபயோகிக்கும் நபர்களின் சராசரி நேரம் 6.36 மணி நேரமாக தெரியவந்திருக்கிறது.
அதேபோல் செல்போன், கணினிகளில் நேரத்தை செலவிடும் நபர்களில் 22.7 சதவீதம் பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் 28 கோடி இந்தியர்களுக்கு கண்பார்வை பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதாக ஆய்வு தகவல் கூறுகிறது.
அதற்கடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது. அங்கு ஒரு நபர் சராசரியாக 10.06 மணிநேரம் பயன்படுத்துகிறார். அந்த நாட்டில் 21.6 சதவீதம் பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள்
செல்போன் உபயோகப்படுத்துவதில் இளம் வயதினர் அதிகம். சமூக ஊடகங்களில் ஒரு நிமிடத்துக்கு 510 விமர்சனங்கள், 1 லட்சத்து 36 ஆயிரம் புகைப்படங்கள், 2 லட்சத்து 93 ஆயிரம் தகவல்களை வெளியிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. செல்போனைக் கொண்டு உலகையே வாங்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். படிப்பது, ஷாப்பிங் செய்வது, வங்கியில் பணம் கட்டுவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது என எதையுமே கைபேசியில் முடித்துவிடுகின்றனர். நல்ல விஷயம்தான்.
ஆனால், காலையில் கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரை... சிலசமயம் இரவு தூங்காமல்கூட செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருப்பதுதான் பெரும் தவறு. இதனால், சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது என்பதுபோன்ற வேலைகளைக்கூட செய்யாமல் அவர்களது அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
அடிமையாக உணர்வது எப்படி?
செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் ஒருவர் அடிமையாக இருக்கிறார் என்பதை நாம் சில அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்களால் ஒரு விநாடிகூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. கையில் அது இல்லை எனில் இனம்புரியாத பயத்தில் தவிப்பர். எதையோ இழந்தது போல இருப்பர். செல்போன் அழைப்பு ஒலிக்கும் முன்பே அதை எடுத்துப் பார்ப்பார்கள். அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுந்து அலாரத்தை நிறுத்துவார்கள். செல்போனை அடிக்கடி தொட்டுப் பார்ப்பார்கள். உடல் ரீதியாக கழுத்து, முதுகு, இடுப்பு, கண் தசைகள், தோள்பட்டை வலி, மூளை, நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காது, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன்மூலம் மனரீதியாக கோபம், மனப்பதற்றம், மனச் சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாம் பயன்படுத்தும் செல்போனின் அலைவீச்சு மற்றும் எவ்வளவு நேரம், எவ்வளவு தொலைவில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்காத்துக்கொள்ள என்ன செய்வது?
அந்த பாதிப்புகளில் ஒரு சில அல்லது பல அறிகுறிகள் உங்களிடம் காணப்படுவதாக உணர்கிறீர்களா? இந்தக் கையடக்க ஆபத்தில் இருந்து எப்படி விடுபடுவது? வெகு சுலபம்!. முதல் வேலையாக உங்கள் செல்போனின் இணைய இணைப்பை (மொபைல் டேட்டா) அணைத்து வையுங்கள். மின்னஞ்சல் பார்ப்பது, இணையத்தில் தகவல் அறிவது என தேவையான நேரத்தில் மட்டும் ஆன் செய்து பயன்படுத்துங்கள்.
செல்போன் மட்டுமே வாழ்க்கை அல்ல!. அதற்கு வெளியே எவ்வளவோ இருக்கிறது. உங்கள் கடமைகள், பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு, ‘மெசேஜ்’, ‘வாட்ஸ்அப்’ அனுப்பாமல், நேரில் சென்று பேசுங்கள். நெருக்கமானவர்களிடம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நிறைய படியுங்கள். பிடித்த வேலையில் ஈடுபடுங்கள். புது இடங்களுக்குச் செல்லுங்கள். புது உலகைக் காணலாம்.
No comments:
Post a Comment