பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிகள் வாயிலாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அந்த தகவல்கள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. இதில் பிளஸ்-2 பொதுத் தேர்வு குறித்து மட்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கின்றன. மத்திய கல்வி வாரியத்தின் கீழ் வரும் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு மாநில வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடத்தப்படுமா? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையின் முடிவில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
MOST READ காவலர்களுக்கு ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இணையதளம் வாயிலாக கருத்துகள்
அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை நேற்று முன்தினம் அனுப்பி இருந்தார். அதில் அந்தந்த பள்ளிகள் வாயிலாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்டு அதனை உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன. அவற்றில் பிளஸ்-2 பொதுத் தேர்வை நடத்துவதற்கு விருப்பமா? அல்லது விருப்பம் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு பதில் அளித்த தகவல்களை தனித்தனியாக பிரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் அறிவிப்பார்
அதன்படி, ஒவ்வொரு பள்ளிகளும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரில் தேர்வு நடத்த விருப்பம் தெரிவித்தவர்கள் எவ்வளவு சதவீதம் பேர் விருப்பம் இல்லை என்று கூறியவர்கள் எத்தனை சதவீதம் பேர் என்ற விவரத்தை இணையதளம் வாயிலாக பெற்று, ஆணையரிடம் நேற்று இரவு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் முழு விவரங்களை அறிக்கையாக முதல்- அமைச்சரிடம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்தலாமா?, வேண்டாமா? என்பது குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment