பிளஸ் 2 தேர்வு: பெற்றோராகவும், ஆசிரியராகவும், மாணவனாகவும் மாறி மாறிக் கேள்வி கேட்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 8, 2021

பிளஸ் 2 தேர்வு: பெற்றோராகவும், ஆசிரியராகவும், மாணவனாகவும் மாறி மாறிக் கேள்வி கேட்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்று ஆலோசனை நடத்தும்போது முதல்வர் ஸ்டாலின், பெற்றோராகவும், ஆசிரியராகவும் மாணவனாகவும் மாறி மாறிக் கேள்விகள் கேட்டதாகவும், அதற்குப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தான் பதில் கூறியதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


கரோனா வைரஸ் தொற்று 2-வது அலைப் பரவல் அதிகமாக உள்ளதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன. 

முன்னதாகத் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இறுதியாகத் தேர்வை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கூறும்போது, ''முதல்வர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை ஒரு பெற்றோராக நினைத்துக் கேள்விகளைக் கேட்டார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் கூறியிருக்கிறோம். தன்னை ஓர் ஆசிரியராகவும் முதல்வர் நினைத்துக்கொண்டு சில கேள்விகள் கேட்டார். 

அதற்கும் பதில் கூறினோம். தன்னை ஒரு மாணவனாகவும் கருதி முதல்வர், நான் இந்தச் சூழ்நிலையில், இந்த மனநிலையில் இருந்தால் எப்படித் தேர்வை நடத்துவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இறுதியாக மாணவரின் உடல், மனநலன் கருதித் தேர்வை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பி உள்ளீர்கள். இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். சில பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, யார் தவறு செய்துள்ளார்கள் என்று விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அது குற்றமாக எடுத்துக் கொள்ள்ளப்பட்டுக் காவல்துறைக்குச் செல்லும்போது, முதல்வரின் கட்டுப்பாட்டின்கீழ் அந்தத் துறை செயல்படுகிறது. எனவே யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 comment:

  1. Wow excellent C.M , and Minsters and all the administrative officals, great 👍 to keepitup longtime

    ReplyDelete