கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல் மற்றும் உர வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக விவசாயிகளை புதிய உறுப்பினர்களாக சேர்த்திடவும், கடன்கள் வழங்கவும் ரூ.11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடன்
கொரோனா காலகட்டத்திலும் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்கள் சேதமடைந்தால் கலெக்டரிடம் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் வைத்திருக்கின்ற 5 பவுனுக்கு மிகாமல் உள்ள கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் கூறி இருந்தார். அதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி வழங்கி இருப்பதாக நிறைய புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதுதொடர்பாக ஆய்வு செய்து தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment