போங்க பாஸ்... போடுங்க முதல் டோஸ்: மாப்பிள்ளை தகுதியெல்லாம் இப்போ மாறிப்போச்சு!
:
அரசு வேலை, 6 அடி உயரம், சிவப்பு நிறம், சொந்த வீடு... என, மணமகன் தேடும் விளம்பரம் இனி இப்படி வராது போலிருக்கிறது.சுகர், பிரஷர் இல்லை; மெடிக்கல் இன்சூரன்ஸ் உண்டு; 10 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது... இனி இப்படி விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆண் - பெண் பிறப்பு விகிதாசாரத்தில், நன்கு படித்த, கை நிறைய சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளைக்கே பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால், பெண்களின், அவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் இதையெல்லாம் தாண்டி நல்ல ஆரோக்கியத்தைத் தேடுவதாகத்தான் இருக்கிறது. கொரோனா தாக்கத்தின் கொடிய காலத்தில், இது ஒரு விதமான, 'ரிலாக்ஸ்' தகவலாகவும் இருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக ஒரு வித்தியாசமான விளம்பரம், சமூக ஊடகங்களில், 'சடுகுடு' ஆடுகிறது.'எம்.எஸ்.சி., கணிதம் படித்த சுயதொழில் செய்யும், 'இரண்டு டோஸ் கோவிஷீல்டு' தடுப்பூசி போட்ட, 28 வயது பெண்ணுக்கு, 30 வயதுக்குள் நன்கு படித்த, நகைச்சுவை உணர்வு, புத்தகம் வாசிக்கும் ஆர்வம் கொண்ட, 'கோவிஷீல்டு இரண்டு டோஸ்' செலுத்திய மணமகன் தேவை' என்று சொல்கிறது அந்த விளம்பரம்.
அந்த விளம்பரம் உண்மையில்லை; 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டு, 'எடிட்' செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால், எதிர்காலத்தில் எல்லோருடைய எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான அத்தாட்சியாக இருக்கிறது.வித்தியாசமான இந்த விளம்பரம், 'பேச்சுலர்' பசங்களை, 'பேச்சிலர்' ஆக்கியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், '90ஸ் கிட்ஸ்'களை நடுங்க வைத்துள்ளது.
ஏற்கனவே, ஐ.டி., இன்ஜினியர்களைப் போல, அதீத சம்பளத்தை எதிர்பார்க்கும் இளம்பெண்களால், 'சிங்கிள் பசங்க' பலரும் ஆடிப்போயிருக்கிறார்கள்.
இளவட்டக்கல்லைத் துாக்கிப் போட்டு, ஜல்லிக்கட்டிலே காளையை அடக்கி, மஞ்சு விரட்டிலே மாடு பிடித்து, புஜபலம் காட்டி, திருமணம் செய்த வரலாறு இந்த மண்ணுக்கு இருக்கிறது. இப்போது இளவட்டக் கல்லை எங்கும் பார்க்க முடியவில்லை. அதை யாரும் துாக்கிப் போடவும் சொல்வதில்லை. ரெண்டே ரெண்டு தடுப்பூசிதானே... போட்டுட்டா போச்சு...அட...முதல்ல போங்க பாஸ்... போடுங்க முதல் டோஸ்!
No comments:
Post a Comment