பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி.மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது. மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, பின்னாளில் எஸ்.எஸ்.எல்.சி.யை கல்வித்தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.
கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.
2020-21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment