‘நெசவுக்கலை’ பயில ‘பிரத்யேக பள்ளி’ - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 26, 2021

‘நெசவுக்கலை’ பயில ‘பிரத்யேக பள்ளி’

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பழமையான 1010 நெசவாளர் காலனியில் இருக்கிறது, நூற்பு கைத்தறி நெசவு அமைப்பு. இங்குதான் அமைந்துள்ளது, மெல்ல அழிந்துவரும் கைத்தறி நெசவை மீட்டு அடுத்த தலைமுறைக்கு வழங்கும் நெசவுப் பள்ளி. 


தன் வாழ்நாள் கனவாக அந்தப் பள்ளியை உருவாக்கி வருகிறார் நூற்பு அமைப்பின் நிறுவனர் சிவகுருநாதன். “இன்று கைத்தறி நெசவில் ஈடுபடுகிறவர்கள் பலரும் முதுமை அடைந்துவிட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் யாரும் நெசவு பக்கம் வருவதில்லை. வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். சில வீடுகளில் தறிகளையே விற்றுவிட்டார்கள். இன்று கைத்தறி நெசவுக்கான தறியைப் பார்ப்பது அரிதான விஷயமாகிவிட்டது. 

எனவே, அழிந்துவரும் நெசவுக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக வேண்டும் என்ற யோசனையை குக்கூ காட்டுப்பள்ளியை உரு வாக்கி, நடத்தி வரும் சிவராஜ் முன்வைத்தார். அதை நான் படிப்படியாக செயல்படுத்தி வருகிறேன். 70 சதவிகித பணிகள் முடிந்து விட்டன. இந்த திட்டம் முழுமைப்பெற்றால், கைத்தறி கலையின் எல்லா செயல்பாடுகளை யும் இங்கு கற்றுக்கொள்ளலாம்’’ என்று விளக்கமாக பேசும் சிவகுருநாதன், நெசவுக் கலை மீதான ஈர்ப்பினால், ஐ.டி.வேலைக்கு முழுக்கு போட்டவர். 


இப் போது நெசவுக்கலையை முழு மூச்சாக சுவாசிக்கிறார். இந்தக் கைத்தறி நெசவுப் பள்ளியில், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயிற்சி பெறமுடியும். பருத்தி விதை, பஞ்சு, நூல் தயாரித்தல், அதற்கான நடைமுறைகள், சாயமிடுதல், நெசவு நுட்பங் கள், துணி நெய்தல் என அனைத்தையும் ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சிவகுருநாதன். ‘‘காந்திகிராம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் நெசவு கற்பிக்கப்பட்டாலும், நெசவின் முழுமையைக் கற்பிக்கும் முதல் பள்ளியாக நூற்பு விளங்கும். 

நெசவை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், குழந்தைகளுக்குப் பருத்தி நூல் எப்படி துணியாக மாறுகிறது என்பதைச் சொல்லும்போது அவர்களுடைய புரிதல் அதிகமாகிறது. அதன் காரணமாக, விளையாட்டாகக்கூட துணிகளைத் தூக்கியெறியும் அலட்சிய மனப்போக்கு மாறும். நெசவின் உழைப்பும் முயற்சியும் தெரியவரும். நூற்பு அமைப்புடன் நெசவுப் பள்ளி சேர்ந்து இருப்பதால், கைத்தறி துணி உற்பத்தியின் நடைமுறைகளை ஆரம்பம் முதல் கடைசி வரையில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 


ஒரு துணி எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்துப் புரிந்துகொள்வார்கள். இவ்வளவு கடினமான வேலைகள் மூலம் துணி உருவாக்கப்படுவதால், கைத்தறி மீது தனி மரியாதை அவர்களுக்கு ஏற்படும். நெசவை வருமானத்திற்கு ஒரு வழியாகப் பார்க்காமல், அதையொரு கலையாகக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்று உணர்ந்து பேசுகிறார் சிவகுருநாதன். கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதம் திறக்கப்பட இருந்த நூற்பு நெசவுப் பள்ளியின் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

 “ஒரு பள்ளிக்கான முழு அமைப்பை உருவாக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது. எட்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்து நெசவைக் கற்றுக்கொள்ளலாம். பேஷன் டிசைனிங் மாணவர்களும்கூட வருகை தந்து நெசவாளர்களுடன் உரையாடிச் செல்லலாம்” என்று புன்னகையுடன் வரவேற்கிறார் கைத்தறி நெசவை மீட்கும் இந்த இளைஞர்.

No comments:

Post a Comment