இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலியை 53 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதில், வாட்ஸ்-அப்பில் வெளியிடப்படும் சில தரவுகள், அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதனால் தங்களது தனியுரிமை பாதிக்கப்படும் என்று பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாண பத்திரத்தில், புதிய தனியுரிமை கொள்கையை ஏற்கும்படி அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு பயனாளர்களை ‘வாட்ஸ்-அப்’ நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இதற்கு பதில் அளிக்கும்வகையில், ‘வாட்ஸ்-அப்’ செய்தித்தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எங்களது பதிலை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். பயனாளர்களின் தனியுரிமைக்கு உயர் முன்னுரிமை அளிப்பதாக உறுதி அளித்துள்ளோம். வாட்ஸ்-அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனாளர்களுக்கு வாட்ஸ்-அப்பின் செயல்பாடுகளை குறைக்க மாட்டோம்.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்வரை, பயனாளர்களுக்கு எங்கள் கொள்கை குறித்த நினைவூட்டல்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்போம். அவர்களது தனிப்பட்ட தகவல்களின் அந்தரங்கம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment