கரோனா பெருந்தொற்றால் இந்தக் கல்வி ஆண்டிலும் இணைய வழியிலேயே பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இணையவழியில் கற்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில், இணையவழியில் நடைபெறும் பாலியல் சீண்டலும் தற்போது கவனத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்போடு இணையவழிக் கல்வியை அணுகுவதற்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளைத் தருகிறார் உளவியல் மருத்துவர் ஜி. ராமானுஜம்.
l முதலில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலுக்கு எந்த வகையிலும் தாங்கள் பொறுப்பல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். தனக்குத் தொல்லை கொடுத்த ஆசிரியரால் மிரட்டல் வருமோ என்று அஞ்சத் தேவையில்லை. அவமானமாக உணர வேண்டிய அவசியமில்லை. பலவீனமான குழந்தைகள்தாம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோரின் இலக்கு. தனக்கு நேர்ந்த பாதிப்புகளை ஒரு மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவி, பெற்றோர் என வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் தயங்காமல் சொல்ல வேண்டும். அந்தத் தைரியத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்
l எது அத்துமீறல் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என் உடல் என் உரிமை; நல்ல தொடுதல், மோசமான தொடுதல் எவையெவை என்பதை எல்லாம் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொடுதல் மட்டுமில்லாமல் விருப்பத்துக்கு மாறான காட்சிகளைப் பார்க்கத் தூண்டுவது, அது குறித்துப் பேசுவது, பின்தொடர்வது இப்படி எல்லாமே குற்றம்தான். இணையவழிக் கல்வி கற்பதில் மட்டும் என்றில்லை, பேருந்து, ரயில் பயணத்தில், வீட்டில் என எங்கும் மாணவர்களுக்குப் பாலியல் சீண்டல் நடக்கலாம். அதிலிருந்து மாணவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
l பெற்றோருக்கும் இது குறித்த புரிதல் வேண்டும். பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்த வழிமுறைகளை, தகுந்த இடைவெளிகளில் ஊடகங்களில் வெளியிட்டு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
l ஆசிரியர்களுக்கும் இணையவழியில் பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்குப் பாடங்களை நடத்துவதற்குத் தகுந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும். அப்படி நடைபெறும் இணையவழி வகுப்புகளைப் பதிவுசெய்யும் வசதியையும் பள்ளிகள் முன்னெடுக்க வேண்டும்.
l ஏதோ ஒரு ஆண் ஆசிரியர் அல்லது சக ஆண் நண்பனால் பாலியல் சார்ந்து பாதிப்புக்கு ஆளாக்கப்படும் பட்சத்தில் அந்த மாணவிக்கு ஒட்டுமொத்த ஆண்களின் மீதும் வெறுப்பு ஏற்படக்கூடும். இப்படி எல்லா ஆண்களையும் பொதுமைப்படுத்தும் போக்கைப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது "பெண்" குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல. பெண் குழந்தைகளை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதை ஆண் குழந்தைகளுக்கும் பெற்றோர் சொல்லித்தர வேண்டும்.
No comments:
Post a Comment