குறைகளை தெரிவிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை:
ஆன்லைன் வகுப்பு நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
╰•★★ Join Our WhatsApp ★★•╯
அனைத்து தரப்பினரும் குறைகளை தெரிவிக்கும் வகையில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்றும், ஆன்லைன் வழி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்குமான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் எவ்வாறு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டதோ? அதேபோல், நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் ஆன்லைன் வழிக்கல்வி தொடர்பாக சமீபத்தில் சில பிரச்சினைகள் சில பள்ளிகளில் எழுந்தது. இதையடுத்து அரசு அது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கட்டுப்பாட்டு அறை
* மாணவர் பாதுகாப்பை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படும். இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் 2 பேர், பள்ளி நிர்வாக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளிசாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினராக இருப்பர்.
* ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கும். அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
* மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
போக்சோ சட்டம்
* இந்த மையம் புகார்களை பதிவு செய்வது மட்டுமின்றி அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இந்த மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
* பள்ளிகளை சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழுபுரிதல் உண்டாகும் வகையில், ஆண்டுதோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
* பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுயத்தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
ஆன்லைன் வழி கற்றல், கற்பித்தல்
* ஆன்லைன் வழி கற்றல், கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறை சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணிய வேண்டும். ஆன்லைன் வழி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு, அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வுசெய்ய வேண்டும்.
* புகார் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எளிதே தெரிவிப்பதற்காக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
* மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்ய தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் (வாய்மொழி உள்பட) பெறப்பட்டு இருந்தாலும், இந்த பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்
* அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
* இந்த நெறிமுறைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment