அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விவரங்களை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மெல்ல கற்கும் மாணவர்கள்
கடலூர் மாவட்டத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டு இருந்தார்.
இதையடுத்து இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா அரசு, உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சமர்ப்பிக்க வேண்டும்
அதில், தொடக்க கல்வித்துறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மெல்ல கற்கும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித்துறை சார்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை மெல்ல கற்கும் மாணவர்களின் பெயர் பட்டியல், இடைநிற்றல் மாணவர்களின் பெயர் பட்டியல், இடைநிற்றலுக்கான காரணம் ஆகிய விவரங்களை வகுப்பு வாரியாக தனித்தனி தாளில் பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அனைத்து அரசு உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.
வட்டார கல்வி அலுவலர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இந்த விவரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment