முழு கவனம் படிப்பில்... எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 30, 2021

முழு கவனம் படிப்பில்... எப்படி?

""5 நிமிடத்திற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை... புத்தகத்தை எடுத்தால் சலிப்பாக இருக்கிறது... புத்தகத்தை எடுத்தால் கண்கள் மொபைலைத் தேடுகின்றன... தேர்வுக்குத் தயாராக முடியவில்லை...'' -இப்படிப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான சில தீர்வுகள் இதோ. கரோனா பெருந்தொற்று கல்வித்துறையில் எதிர்பாராத அளவு மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. 




கரும்பலகையின் முன் மணிக்கணக்கில் இருந்த மாணவர்கள் இன்று கையடக்கக் கணினியின் முன் காத்திருக்கின்றனர். ஆசிரியருக்கு பயந்து ஓடி ஒளிந்தவர்கள் இன்று காணொலியில் ஆசிரியருக்குத் தெரியும்படியே சேட்டை செய்கின்றனர். இவ்வாறான பல மாற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வகுப்பறையில் இருந்து படிப்பதைவிட, வீட்டில் இருந்து பாடத்தைக் கவனிப்பது, படிப்பது என்ற புதிய நடைமுறை அனைத்து மாணவர்களுக்குமே கடினம்தான். 


இனி வரும் காலங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மை நாமே தகவமைத்துக்கொள்வது மட்டுமே எந்த ஒரு நிலையையும் சமாளிக்கும் வலிமையை நமக்குத் தரும். மாறுபட்ட கல்விச் சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது எப்படி? அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும்? தேர்வுக்கு தயாராவது எப்படி? கொஞ்சம் யோசிப்போம். நீங்கள் ஏன் பின்தங்கியிருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு காரின் ஓட்டுநர் இருக்கையில் இருப்பதற்கும், பின் இருக்கையில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 



ஓட்டுநர் இருக்கையில் இருந்தால் சிறிதளவு கவனச்சிதறல் கூட இல்லாமல் காரை ஓட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். அதுவே பின் இருக்கையில் நீங்கள் இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களது படிப்பை நீங்கள் ஒரு பொறுப்பாக, கடமையாக, உங்களது வளர்ச்சிக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளாததால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனவே ஓட்டுநர் கவனம் சாலையில் இருப்பதைப் போல உங்களுடைய கவனம் படிப்பில் குவியட்டும். 



கவனச்சிதறல்களை எவ்வாறு சமாளிப்பது? படிப்பதை நீங்கள் ஒரு பொறுப்பாக எடுத்துக் கொள்ளும்போது, அதில் கவனம் தானாக வந்துவிடும். அதையும் மீறி படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா? எனினும் கவனச்சிதறலைத் தவிர்க்க சில வழிகள்.. 20 நிமிடப் பயிற்சி: ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் எவ்வளவு மணி நேரத்தை சரியாக உபயோகிக்கிறோம் என்று கண்காணியுங்கள். இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களை வீணாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



அதில் ஒரு சில மணி நேரங்களே உங்கள் படிப்பில் சிறந்து விளங்கப் போதுமானது. இதற்காக நீங்கள் ஒரு பயிற்சி செய்ய வேண்டும். இது ஒரு 20 நிமிடப் பயிற்சி. ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் இதற்காக செலவிட்டால் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாது. இந்த பயிற்சிக்காக, அமைதியான, யாரும் தொந்தரவு செய்யாத ஓர் அறையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவறறை எடுத்துக்கொண்ட பிறகு பயிற்சியைத் தொடங்குங்கள். 



இப்போது நீங்கள் தேர்வு செய்த அறைக்குச் சென்று நீங்கள் என்ன படிக்க நினைக்கிறீர்களோ அந்த புத்தகத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். இப்போது இந்த 20 நிமிடம் எதற்கும் செவி மடுக்காமல், மூளையை வேறு திசைக்கு மாற்றாமல் 20 நிமிடம் முழுவதும் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். சரியாக 20 நிமிடத்திற்கு டைமர் வைத்து பயிற்சி செய்யுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் 20 நிமிடத்திற்கு அவ்விடத்தை விட்டு நகரக் கூடாது. வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது. 



செல்லிடபேசி, கணினியை கண்டிப்பாக அந்த அறைக்குள் அனுமதிக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களையும் யாரையும் வரவேண்டாம் என்று கூறிவிடுங்கள். முதலில் ஒருசில நாள்கள் கடினமாக இருக்கும் இந்தப் பயிற்சியை தொடர்ந்து முயற்சித்தால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். முதல் சில நாள்கள் கவனச் சிதறல் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் கவனம் மேம்பட்டுவிடும். மணிக்கணக்கில் மேலோட்டமாகப் படிப்பதைவிட 20 நிமிடங்கள் ஆழமாகப் படிப்பது அதிக பலனைத் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. 



புதிய கற்றல் வழிமுறைகள் சலிப்பைப் போக்கி கவனம் செலுத்துவதற்கான ஆர்வத்தை வளர்க்க வேண்டுமெனில் கற்றலில் புதிய வழிமுறைகளைக் கையாளலாம். உங்களுக்குப் பிடித்த பாடத்தை முதலில் தொடங்குங்கள். அந்த பாடத்திலும் உங்களுக்குப் பிடித்தமான தலைப்பை முதலில் தேர்வு செய்து படியுங்கள். அதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால் இன்னும் ஆர்வம் கூடும். 



இல்லையெனில் அந்த பாடத்தலைப்பு குறித்த விடியோ ஒன்றைப் பார்த்துவிட்டு அதனைப்பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு புத்தகத்தைத் திறக்கலாம். இது உங்களைப் படிக்கத் தூண்டும் மேலும் பாடப்புத்தகங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த படங்கள் கொண்ட அட்டைகளை வாங்கி புத்தகங்களை அழகாக வைத்திருங்கள். பல வண்ணங்களில் பேனாவை பயன்படுத்துங்கள். நீங்கள் படிக்கும் அறையை அழகாக வைத்திருங்கள். 



உடல் ஆரோக்கியம்: உங்கள் மனமும், சிந்தனையும் ஒருசேர கவனம் செலுத்த வேண்டுமெனில் உடல் ஆரோக்கியம் முக்கியம். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் அருந்துங்கள். நொறுக்குத் தீனிகள், துரித உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். உணவுக் குறைபாடு, சத்தில்லாத உணவுகளைச் சாப்பிடுதல் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் நலம் கெட்டால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. 



தூக்கம்: தூக்கம் என்பது மூளைக்கு கொடுக்கப்படும் உணவு. உங்கள் உடல் இயங்க, பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல இரவு நேரத்தில் சரியாக தூங்க வேண்டும். 7 மணி நேர தூக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி: உங்களது கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்க காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரிக் கிறது. மூளைக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. 



இதனால் கவனச் சிதறல் தவிர்க்கப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோன்று சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் ஒருநிலைப்படும். இது கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கும். இலக்குகளுடன் தெளிவாக இருங்கள்! சில நேரங்களில் நம்முடைய கவனம் சிதறுகிறது என்றால் இலக்கு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு ஏற்றபடி ஒரு சிறிய இலக்கேனும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். 



உதாரணமாக வரும் தேர்வில் 90% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு படிக்கத் தொடங்க வேண்டும். ஒரு பேப்பரில் அதை எழுதி உங்கள் அறையில் அடிக்கப்படி கண்ணில் படும்படி ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நீங்கள் என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் ஓர் அட்டவணையாகத் தயார் செய்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எவரொருவரும் சாதனை செய்ய முடியும். முயற்சி, பயிற்சி, வாழ்வில் வெற்றி!

No comments:

Post a Comment