கூகுள் படிவம் மூலம் மாணவர் சேர்க்கை: அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 22, 2021

கூகுள் படிவம் மூலம் மாணவர் சேர்க்கை: அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வம்

கூகுள் படிவம் மூலம் மாணவர் சேர்க்கை: அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வம் 

 ╰•★★ Join Our WhatsApp ★★•╯

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் கூகுள் படிவம் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள். மாணவர் சேர்க்கை கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்றி தொடரும் மாவட்டங்களில் ஈரோடு ஒன்று. இங்கு அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கவும், மாணவர் சேர்க்கையை நடத்தவும் அரசு சார்பில் உத்தரவுகள் வழங்கப்படவில்லை. 


ஆனாலும், அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்-ஆசிரியைகள் தங்கள் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கைக்கு தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக அரசு பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் வீதிகளில் இறங்கி வீதி வீதியாக சென்று மாணவ- மாணவிகளை சேர்ப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அப்படி செல்ல முடியாது என்பதால் கூகுள் படிவத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்து அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்து மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. 

 குறிப்பாக மழலையர் வகுப்புகளாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட பின்னர் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதே நேரம் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு, வருமானம் இழந்த பலரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர். இதுபோல் இந்த ஆண்டும் தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக் கூடங்களில் சேர்த்து வருகிறார்கள். 

காலதேவைக்கு ஏற்ப அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் கூகுள் படிவம் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறார்கள். கல்விக்கட்டணம் இதுபற்றி எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.சுமதி கூறியதாவது:- அரசு பள்ளிக்கூடங்களில் மன உளைச்சல், மன அழுத்தம், கல்விக்கட்டண பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவ-மாணவிகள் படிக்கவும், பெற்றோர்கள் நிம்மதியாகவும் இருக்க முடியும். அத்தகைய சிறந்த சூழலை நாங்கள் பெற்றோரிடம் கூறுகிறோம். மாணவர்கள் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டு உள்ள கூகுள் படிவத்தை பெற்றோரின் தொலைபேசிக்கு அனுப்பி, படிவத்தை நிரப்பி பெற்று, நாங்கள் கணினியில் பதிவு செய்து கொள்கிறோம். 

பள்ளிக்கூடத்திலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பெருமை பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.எஸ்.முத்துராமசாமி கூறியதாவது:- எங்கள் பள்ளிக்கூடம் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு போட்டிப்போடும் வகையில் உள்கட்டமைப்புகள் உள்ளன. இந்த விடுமுறை காலத்திலும் வகுப்பறை பராமரிப்பு, தோட்டம் பராமரிப்பு என்பதை தொய்வு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் பள்ளிக்கூடத்தில் மிகக்குறைந்த அளவில் இருந்த மாணவர் எண்ணிக்கையை 400-க்கும் மேல் உயர்த்தி இருக்கிறோம். 

குழந்தைகளை நல்ல முறையில் கையாளும் ஆசிரிய-ஆசிரியைகள் சிறந்த தொடக்கக்கல்வியை கொடுக்கிறார்கள். மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். எங்களை தேடி வரும் அனைவரிடமும் அரசு பள்ளிக்கூடங்களின் பெருமை குறித்து எடுத்துக்கூறி சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறோம். 

இதுபோல் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களும் சிறப்பாக இயங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பாடப்புத்தகங்கள் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக அரசு பள்ளிக்கூடத்தில் மகனை சேர்த்த சச்சின் டிரேடர்ஸ் உரிமையாளர் கே.கார்த்திக்கேயன் கூறியதாவது:- 

 கொரோனா காலத்தில் வீட்டுக்கு உணவுக்கே சிரமம் என்ற நிலையில் கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் கஷ்டப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது மகனை அரசுப்பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவு செய்தேன். அதுபோல் மகளையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். தொடக்கத்தில் நாம் குழந்தைகள் விஷயத்தில் தவறு செய்கிறோமோ என்ற மனநிலை இருந்தது. 

ஆனால், கொரோனா காலத்திலும் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் பாடங்கள் எடுத்து கல்வி கற்றுக்கொடுத்து தொடர்பிலேயே இருந்தனர். அதுமட்டுமின்றி பள்ளிக்கூடம் திறக்கவில்லை என்றாலும் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட இலவச பொருட்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் ஆசிரியைகள் வழங்கினார்கள். 

அரிசி, பருப்பு, முட்டை என்று பொருட்களைக்கூட தந்து விட்டனர். குழந்தைகள் பெயரில் வீட்டிலும் சாப்பாடு பிரச்சினை இல்லை என்ற நிலை ஆகியது. கல்விக்கட்டணத்துக்காக கடன் வாங்கும் நிலை மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். அரசு பள்ளிக்கூடங்களில் மாற்று சான்றிதழ் இல்லாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்பதும், வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment