ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பிறகு, பள்ளிகளுக்கு மீண்டும் வர வேண்டிய குழந்தைகள் குறித்து உடனடிக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு யுனிசெஃப், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கரோனா பெருந்தொற்றின் விளைவாகக் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் பயணத்தில் உலகம் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தன.
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரச்சாரம் (Campaign Against Child Labour) என்னும் அரசு சாரா அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு நடத்திய கள ஆய்வின் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, 24 மாவட்டங்களில் உள்ள சிறார்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்களின் விகிதம் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 79% ஆக அதிகரித்துள்ளது.
கல்வியைத் தொடர முடியாத காரணங்கள்
படிக்கும் வயதில் ஏன் வேலைக்குச் செல்கிறீர்கள் என்னும் கேள்விக்கு, பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன, அப்பா-அம்மா வேலையை இழந்துவிட்டனர் ஆகிய காரணங்கள்தான் பெரும்பாலான சிறுவர்களின் பதில். ஸ்மார்ட்போன் இல்லாதது, இணைய இணைப்பு கிடைக்காதது, இணைய வகுப்புகளைக் கவனிக்க ஆர்வமில்லாதது போன்ற காரணங்களுக்காகப் பெரும்பாலான சிறார்கள் அவ்வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனால், முதல் அலையில் அரசு படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்தபோது, பெரும்பாலான பெற்றோர் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டனர்.
சிறார்களில் பலர் நான்கு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை வேலை பார்த்திருக்கிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரை கூலி வழங்கப்பட்டுள்ளது. பலர் உடல்ரீதியான, மனரீதியான சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறினார்கள். 18.6% பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறினார்கள். பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு இல்லை என்று பதில் சொன்ன அனைவரும் அதை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. பலர் இதை வெளியே சொல்லத் தயங்கியிருக்கலாம்.
அரசுக்கான கோரிக்கைகள்
இந்த நிலை மாற, அனைத்துக் குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசும் மக்களும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்கிறார், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மாநில அமைப்பாளர் ஆர்.கருப்பசாமி.
“பள்ளிகளைத் திறப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் உள்ள குழந்தைகள் எத்தனை பேர் பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள் என்பதையும், எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வ சிக்ஷ அப்யான் திட்டத்தின் கீழ் இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டாலும், அவற்றின் முடிவுகள் உண்மை நிலவரத்தைப் பிரதிபலிப்பதில்லை. எனவே, தமிழ்நாடு அரசு இந்தக் கணக்கெடுப்பில் தன்னார்வக் குழுக்களையும் குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். கல்வியை நிறுத்திவிட்டு, வேலைக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளுக்குக் கல்விக்கு எதிரான மனநிலை உருவாகியிருக்கும். அதை மாற்றுவதற்கு அனைவருக்கும் முறையான உளவியல் ஆலோசனை அளிக்கப்பட வேண்டும்
“ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.4,000 உதவித்தொகை கொடுத்திருப்பதுபோல், வேலைக்குப் போன குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டால், அந்தக் குடும்பங்கள் தமது குழந்தைகளை உடனடியாகப் பள்ளிக்கு அனுப்பிவைப்பதில் பெரும் பங்காற்ற முடியும்.
நிவாரணத் தொகை அளிப்பது மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட குடும்பங்களுக்கென்று தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த இடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தாலும் உடனடியாக 1098 என்கிற எண்ணுக்கு அழைத்துப் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிப்பவரின் அடையாளம் எதற்காகவும் வெளியே சொல்லப்படாது.”
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு அரசு ஆணையின்படி நிறுவப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது பஞ்சாயத்துத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர், காவல் துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோரை உள்ளடக்கியது. இவர்களின் பணி, ஒவ்வொரு கிராமத்திலும் பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் என அதிகம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழந்தைகளின் பட்டியலைத் தயார்செய்து, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு அனுப்புவது. அதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை அளிக்கப்படும். இந்த உதவித்தொகை கிடைத்தால் முழுமையாக அந்தக் குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதிசெய்ய முடியும்.
நீண்ட கால நடவடிக்கைகள்
விதிகளின்படி, குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். குழுவினர் வெவ்வேறு அரசுப் பொறுப்புகளில் இருப்பதால் அவர்களால் இந்தப் பணிக்கு உரிய கவனம் செலுத்த முடிவதில்லை. இந்தப் பிரச்சினையைக் களைய மாவட்ட நிர்வாகம் உரிய காலக்கெடுவுக்குள் கூட்டங்களை நடத்திக் குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
அல்லது, பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து சொல்வதற்கான பணியில், ஆர்வமுள்ள தன்னார்வலர்களையும் செயல்பாட்டாளர்களையும் ஈடுபடுத்தலாம். எங்கள் ஈரோடு மாவட்டத்தில் 60 குழந்தைகளுக்குத்தான் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் உதவித்தொகை தேவைப்படும் நிலையில் ஆயிரம் குழந்தைகளாவது இருப்பார்கள்.
ஒவ்வொரு மாதமும் எத்தனை குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர், எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது என்னும் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றி வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யலாம்.”
அனைவருக்கும் கல்வியை உறுதிசெய்வதற்குச் சட்டமே இயற்றப்பட்டுவிட்டது; குழந்தைத் தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் தாண்டி இத்தனை குழந்தைகள் கல்வியை விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பது மாபெரும் சமூக அவலம். அதை முற்றிலும் களைவதற்கான பணிகள் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறுவது அவசியம்.
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
No comments:
Post a Comment