வீட்டை குளிரூட்ட சில டிப்ஸ்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 9, 2021

வீட்டை குளிரூட்ட சில டிப்ஸ்!

வெயில் காலங்களில் , வீட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமெண்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். பகல் முழுவதும் அனலாக இருக்கும் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். 



 ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும். இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கிவிடுகிறது. ஆக, வெயில் சூட்டிலிருந்து உங்கள் மொட்டை மாடித் தரையைப் பாதுகாத்தால் அதன் வழியே வீட்டினுள்ளே சீலிங் வழியாக சூடான காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு என்ன செய்யலாம்? 


 மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்
 
இதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக்காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் சுளீரென வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும். இதில் குறைவானது முதல் அதிகம் செலவு வைப்பது வரை பல முறைகள் இருக்கின்றன. 

செலவு அதிகம் பிடிக்கும் முறை: 

வெப்பத்தடுப்புக்கென்றே பிரத்யேகமாக விற்கப்படும் சுண்ணாம்புக் கலவைகள். 5 லிட்டர் பக்கெட்டுகள் 2500 ரூபாய் முதல் துவங்குகின்றன. இதில் பல வகைகள் இருக்கின்றன. 

செலவு குறைவான முறை: 

சாதாரண ஸ்னோசெம், சூர்யா செம் போன்ற சுண்ணாம்புப் பைகள் 10 கிலோ ரூபாய்.200 க்குள் ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும், அவற்றுடன் 500 கிராம் பெவிகால் கலந்து நீர்விட்டுக் கரைத்து நன்றாக திக்காக மாடித் தரையில் அடிக்கவேண்டும். 750 சதுர அடிக்கு 10 கிலோ சுண்ணாம்பு, பெயின்ட் ப்ரஷ், பெவிகால் எல்லாம் சேர்த்து ரூ.500க்குள் முடிந்துவிடும். ஒரு பெயின்டருக்கு ரூ.500 அதிகபட்ச சம்பளம் கொடுத்தால் கூட காலை 6 மணிக்குத் துவங்கி 7.30க்குள் வேலையை முடித்துவிடலாம். அதிகபட்ச செலவு ரூ.1000.00 மட்டுமே. 


ஷேட் நெட்கள்: 

கட்டடங்கள் கட்ட மறைப்பிற்காகப் பயன்படுத்தும் பச்சை நிற வலைகளை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். மாடிதோட்டத்தில் பந்தல் போட பயன்படுத்துவது. இது 10 அடி அகலம், 150 அடி நீள பண்டல்களாக விற்கப்படுகிறது. 50% நிழல் தருபவை, 75% நிழல் தருபவை, 90% நிழல் தருபவை என்று உங்களுக்குத் தேவையான நிழல் அளவிற்கு ஏற்ப இவை விற்கப்படுகின்றன. இவற்றை மொட்டைமாடியில் பந்தல் போல நான்கு பக்கமும், சவுக்கு அல்லது மூங்கில் கம்பு நட்டு அதில் கட்டிப் பயன்படுத்தலாம். இதனால் மாடித் தரையில் நேரடியாக வெயில் பட்டு சூடேறுவது மட்டுப்படுவதால் சீலிங் வழியே சூடு வீட்டின் உள்ளே இறங்குவது தடுக்கப்படும். வெயில் காலம் முடிந்து முறையாக எடுத்துப் பாதுகாத்துப் பயன்படுத்தினால் குறைந்தது 5 வருடங்கள் கூட இந்த ஷேட் நெட்கள் உங்களுக்கு உழைக்கும். 

தென்னை ஓலைகள்: 
 
குடிசை போடப் பயன்படுத்தும் தென்னை ஓலைகளை மாடியில் பரவலாகப் போட்டு தரையை மூடுவதன் மூலமும் ஓரளவு சூடு இறங்காமல் தவிர்க்கப்படும். 

சான்ட்விச் பேனல்: 

இருபக்கமும் மெல்லிய தகடுகள் கொண்டு நடுவில் பைபர் போன்ற அதிக கனமில்லாத, கடினமான ஒரு வெப்பத்தடுப்புப் பொருளை வைத்து இந்த கூரையைச் செய்கிறார்கள். வெளிப்பக்க வெப்பம் அல்லது குளிர் உள்ளே வருவது தடுக்கப்படுவது, உள்ளே இருக்கும் குளிர் அல்லது வெப்பம் வெளியே செல்லாமல் தடுக்கப்படுவது போன்றவைகள் இந்த பேனல் மூலம் சாத்தியம். 25 வருடம் உழைக்கும் என்று சொல்கிறார்கள், குறைந்த காலத்தில் இந்தப் பேனலை வைத்து அழகாக ஒரு வீட்டையே நீங்கள் கட்டிவிடலாம். தேவையில்லாதபோது பிரித்து எடுத்து வேறு இடத்தில் மீண்டும் வீடு கட்டிக்கொள்ளலாம். காங்கிரீட் வீடு கட்டுவதை விட செலவு குறைவுதான். இந்தப் பேனலைக் கொண்டு மேற்கூரை அமைப்பதன் மூலமும் வெயில் சூடு இறங்குவதைத் தடுக்கமுடியும். இதுவும் மெட்டல் ரூஃபிங்கை விட செலவு அதிகம் பிடிக்கும். 

சாக்குப் பைகள்: 
 
கோணி எனப்படும் சணல் சாக்குப் பைகளை நன்றாக நீரில் நனைத்து மாடித் தரையில் போடுவதன் மூலமும் ஓரளவு வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். சாக்குப் பை காயக் காய நீர் ஊற்றி நனைக்கவேண்டும்.

No comments:

Post a Comment