பேராசிரியர் பணி நியமனங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பதிலாக, டி.என்.பி.எஸ்.சி., வழியாக மேற்கொள்ள வேண்டும்' என, 'நெட், செட்' பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு, அச்சங்கம் சார்பில், செயலர் தங்க முனியாண்டி அனுப்பியுள்ள கடிதம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் போன்ற பதவிகளில், காலியிடங்களை நிரப்ப வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பதிலாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே, புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
உரிய கல்வி தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு, யு.ஜி.சி., பரிந்துரைத்த அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். பல்கலைகளின் பணி நியமனங்களில் ஊழல் தலை விரித்தாடுவதை தடுக்க வேண்டும். நிபுணர்களை கொண்ட தன்னாட்சி அமைப்பின் வழியே, நியமனங்கள் நடக்க வேண்டும். கடந்த ஆட்சியில், புதிய நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பல்கலைகளின் செயல்பாடுகளை வெளிப்படை தன்மையுடையதாக மாற்ற வேண்டும்.
அண்ணா பல்கலையில் பேராசிரியர்களுக்கு பதில், ஆராய்ச்சி மாணவர்களே பாடம் எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment