கிராமப்புற வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டதை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டியது ஊக்கமளிப்பதாக கறம்பக்குடி மாணவி கூறினார்.
மாணவி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கலியராயன் விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரது மகள் கவுரி (வயது 15). இவர் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் சேர உள்ளார்.
இவர் 9-ம் வகுப்பு படிக்கும்போது கிராமப்புற வளர்ச்சி குறித்து 3 ஆய்வறிக்கையை தயாரித்தார்.
அதில், கிராமப்புற தெருக்கள் மற்றும் அதன் பாரம்பரியம் குறித்தும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரி, குளங்களை பயன்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அதனை மாவட்ட கலெக்டர் முதல் பிரதமர் மோடி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து இருந்தார்.
நீதிபதிகள் பாராட்டு
ஆனால், யாரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லாத நிலையில் மாணவியின் தந்தை லட்சுமணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் தயாரித்துள்ள 3 ஆய்வு அறிக்கைகளையும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த திட்ட அறிக்கையை 5, 8-ம் வகுப்பு பாடத்தில் சேர்க்க வேண்டும் என கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் மாணவி கவுரியிடம், காணொலி காட்சி மூலம் பேசினர். அப்போது ஆய்வுகள், புள்ளி விவர பதிவு குறித்து, நீதிபதிகளிடம் மாணவி விளக்கம் அளித்தார். அதைக்கேட்ட நீதிபதிகள் மாணவியை வெகுவாக பாராட்டினர். இதையடுத்து மாணவி கவுரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஊக்கம் அளிக்கிறது
இதுகுறித்து `தினத்தந்தி' நிருபரிடம் மாணவி கவுரி கூறியதாவது:-
ஐகோர்ட்டு நீதிபதிகளுடன், காணொலி வாயிலாக பேச வேண்டும் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தாலும், பதற்றமாகவும் இருந்தது. ஆனால், நீதிபதிகள் இயல்பாகவும், உற்சாகம் தரும் வகையிலும் என்னிடம் பேசினர். சிறுவயதிலேயே பொது காரியத்தில் ஆர்வமாக இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
கிராம புள்ளி விவர பதிவுகள் குறித்து ஆர்வமாக கேட்ட நீதிபதிகள், இது தேசிய அளவில் அமல்படுத்த வேண்டிய திட்டம், முதலில் உனது கிராமத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என கூறினர். 30 நிமிடத்திற்கு மேலாக பல தகவல்களை கேட்டு உற்சாகமூட்டும் கருத்துக்களை பகிர்ந்தனர்.
எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இதனை நான் கருதுகிறேன். எனது தந்தையின் முயற்சியால் எனது திட்ட அறிக்கை ஐகோர்ட்டின் அங்கீகாரத்தை பெற்று இருப்பது மகிழ்ச்சியாகவும், ஊக்கம் தருவதாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. தலைவருக்கு மின்னஞ்சல்
மேலும், மாணவி கவுரி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. சபை தலைவருக்கு மின்அஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதில், கொரோனா தடுப்புக்கு சுகாதார கட்டமைப்புகள் இல்லாமலும், தடுப்பூசி கிடைக்காமலும் தவிக்கும் சிறிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பேரழிவு ஆயுத உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்தி, சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்குவது குறித்து 5 பக்க அறிக்கையை சமர்ப்பிருந்தேன். இது வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment