என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? என்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரி
கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சற்று தாமதம் ஆகியுள்ளது.
இந்தநிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவர்களுக்கு என்ன தகுதியோ? அந்த தகுதியின் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அந்த ஆணையை ஏற்று, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பதிவு இன்று (நேற்று) முதல் ஆன்லைனில் தொடங்கப்படுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி வரை இந்த பதிவை மேற்கொள்ளலாம்.
இதற்காக தமிழகம் முழுவதும் 52 வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கை என்பது ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை நடைபெறும். நடப்பு கல்வியாண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதுதவிர தனியார் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன.
இதனை பயன்படுத்தி மாணவர்கள் சேர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதையடுத்து, அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கல்லூரி நிர்வாகம் முழுவதுமாக கட்டணத்தை செலுத்த சொல்லுகிறார்களே?
பதில்:- முதல்-அமைச்சர் தனியார் கல்லூரிகள் 75 சதவீதம் கல்வி கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார். அதற்கு மேல் கல்லூரிகள் கட்டணத்தை வசூலிப்பதாக எங்காவது புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எப்போது தொடங்கும்?
கேள்வி:-
என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? விண்ணப்பப் பதிவு எப்போது ஆரம்பிக்கும்?
பதில்:-
மாணவர் சேர்க்கை எந்த மதிப்பெண் அடிப்படையில் என்பது ஆலோசிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. செயலாளர்கள் அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பது என்பது குறித்து விவாதித்து வருகிறார்கள்.
என்ஜினீயரிங் உள்பட இதர கல்லூரி படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டும் சேருவது இல்லை. சி.பி.எஸ்.இ.ல் படித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு கூட இன்னும் மதிப்பெண் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்கு ஜூலை 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிவிப்பதற்குள் நாமும் எந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்ற முடிவை முதல்-அமைச்சர் எங்களை அழைத்து ஆலோசித்த பிறகு அறிவிப்பார். அதன் பின்னர் தான் என்ஜினீயரிங் படிப்பு உள்பட மற்ற எந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் தொடங்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment