சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை தமிழ்நாடு மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களுக்கு அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் அளித்த பேட்டி வருமாறு:-
கொரோனா தொற்று பரவலால் ஓராண்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கான பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த பேரிடர் காலத்தில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பள்ளிகள் சந்தித்து வருகின்றன.
எனவே இயங்காத பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, காப்பீடு மற்றும் தகுதிச் சான்றிதழ் (எப்.சி) ஆகியவற்றில் இருந்து நடப்பாண்டு மட்டும் விதிவிலக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இதுதொடர்பாக தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
மாணவர்களின் நலன்கருதி, வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் என்பதுபோல் பள்ளிகளை படிப்படியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல் கட்டமாக மேல்நிலைப்பள்ளிகளை திறந்து சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment