இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்ட புதிய விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
யோகா அறிவியல் படிப்பு
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி தேர்வுக்குழு, கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது.
அதில், ‘தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வீரலட்சுமி என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆட்சேபனையின்மை சான்று
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான், கோவை தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ளேன்.
நான், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளதால், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இருந்து ஆட்சேபனையின்மை சான்று பெற்றுச் சமர்ப்பிக்கும்படி கோவை தனியார் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செல்லாது என அறிவிக்க வேண்டும்
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேருவதற்கு தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்குத் தகுதியில்லை என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி தேர்வுக்குழு தெரிவித்துள்ளதால், பல்கலைக்கழகம் தகுதிச் சான்று வழங்காது.
2019-20-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது கொண்டுவரப்பட்ட இந்த விதியை டெல்லி ஐகோர்ட்டு ரத்து செய்தது. தற்போது மீண்டும் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால தடை
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு, மருத்துவ பல்கலைக்கழகம் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment