ஆன்லைன் வகுப்புக்காக
மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்
சொந்த பணத்தில் ‘ரீசார்ஜ்' செய்தும் கொடுத்தனர்
ஆன்லைன் வகுப்பில் அனைத்து மாணவர்களும் பங்குபெற வேண்டும் என்பதற்காக, செல்போன் இல்லாதவர்களுக்கு, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர்.
மேலும் இணையதள வசதிக்காக ‘ரீசார்ஜ்’ செய்து கொடுத்தும் இருக்கின்றனர்.
ஆன்லைன் மூலம் பாடங்கள்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோருக்கு அவர்களின் பெற்றோர் செல்போன், லேப்டாப் வாங்கி கொடுத்து இருக்கின்றனர். அதன் மூலம் அவர்கள் கல்வியை கற்று வருகின்றனர்.
ஆனால் அரசு பள்ளிகளில் படித்து, ஏழ்மை நிலையில் சிக்கித்தவிக்கும் மாணவ-மாணவிகளில் பலருக்கு ஆன்லைன் வகுப்பு என்பது எட்டாக்கனியாகவே இன்றளவும் இருக்கிறது. அரசு அதற்கான நடவடிக்கைகளில் தற்போது தீவிரமாக இறங்கி இருக்கிறது.
சமீபத்தில் கூட பள்ளிக்கல்வி துறை ஆணையர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எவ்வளவு பேரிடம் ஸ்மார்ட்போன் வசதி இருக்கிறது? என்ற தகவலை கேட்டு இருந்தார்.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்
இப்படி இருக்கும் சூழ்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சென்னை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் விதமாக சில முயற்சிகளை அந்த பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டு இருக்கின்றனர்.
ALSO READ ஸ்டேட் வங்கியில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி மற்றும் மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான ஆன்லைன் பாடங்களை செல்போன் இல்லாத காரணத்தினால் பங்கேற்காத 15 மாணவ-மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரின் உதவியோடு, ஏற்கனவே உபயோகப்படுத்திய செல்போன்களை பெற்று அவர்களுக்கு வழங்கி இருக்கின்றனர்.
15 மாணவ-மாணவிகள்...
மேலும், இணையதள வசதிக்கு தேவையான ‘ரீசார்ஜ்' செய்வதற்கும், அந்த பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்குள் பணத்தை பிரித்து, மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்து இருக்கின்றனர். இதன் மூலம் அந்த 15 மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்கான ஒரு விதையை ஆசிரியர்கள் விதைத்து இருக்கின்றனர்.
இவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்க விஷயம். மேலும் மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுகுறித்து அந்த பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘மாணவ-மாணவிகள் படித்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதைவிட, புத்தக அறிவை உள்வாங்கி கொண்டு, மற்ற மாணவர்களை போல, அவர்களும் தங்களுடைய பாடங்களை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்தோம்' என்றனர்.
No comments:
Post a Comment