வனத்துக்கு திரும்பும் வழியில் கூட்டமாக தூங்கிய யானைகள் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 10, 2021

வனத்துக்கு திரும்பும் வழியில் கூட்டமாக தூங்கிய யானைகள் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தன. வழக்கமாக செல்லும் பாதையை மறந்து அவை ஊருக்குள் புகுந்துவிட்டதாக‌ தெரிகிறது. 

வனப்பகுதிக்கு செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த யானை கூட்டம் அங்கு பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தியது. இதுவரை சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) மதிப்பிலான சொத்துக்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே யானைகளை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

யானைகள் தங்கள் வனப்பகுதிக்கு செல்வதற்கு 300 மைல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே யானை கூட்டம் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு யானைகளை பெரிய வாகனங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். யானைகளால் பொதுச்சொத்துகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் வழியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு உணவும், தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சீன அரசு தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்துக்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேர நேரலையாக வழங்கி வருகிறது. லட்சக்கணக்கான சீன மக்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், வனத்துக்குள் செல்லும் வழியில் 15 யானைகளும் அழகாகப் படுத்து உறங்கும் காட்சி 'ட்ரோன் கேமரா' மூலம் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment