தமிழகத்தில் காலியாக உள்ள 7,500 சாலைப்பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில், கோட்ட அளவில் காலியாக உள்ள பணியிட விவரங்களை அனுப்புமாறு கோட்டப் பொறியாளர்கள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் 60 ஆயிரம் கி.மீ சாலைகளை பராமரிப்பு செய்ய சாலைப்பணியாளர் பணியிடங்கள் 1997ல் உருவாக்கப்பட்டன. சாலைகளை பராமரிப்பு செய்யும் பணியில் 8 கி.மீ தூரத்திற்கு 2 சாலைப்பணியாளர்களும், மலைப்பகுதி சாலைகளில் 5 கி.மீ தூரத்திற்கு 2 சாலைப்பணியாளர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். 1997ல் உருவாக்கப்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நியமனம் செய்யப்படவில்லை.
15 ஆயிரம் சாலைப்பணியாளர் பணியிடங்களில் தற்போது 7,500 சாலைப்பணியாளர்கள் மட்டும் பணியில் உள்ளனர். பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பின் காரணமாக 7,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. சாலைப்பணியாளர்கள் பணிக்கு கல்வித்தகுதி 5ம் வகுப்புக்கு மேல் படித்திருக்க வேண்டும். நியமனம் செய்யப்படும் சாலைப்பணியாளரின் ஓராண்டு பயிற்சி காலத்தில் ரூ.1,500 ஊக்க ஊதியமும், அதை தொடர்ந்து ‘‘டி’’ பிரிவு ஊழியருக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் சாலைப்பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தது. அதன்அடிப்படையில் சாலைப்பணியாளர்கள் காலியிடங்களை அரசு நிரப்ப நேரிட்டால் காலியிட விவரங்கள் பட்டியல் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதற்காக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பொறியியல் துறையின் தலைமைப்பொறியாளர் சாந்தி, தமிழகத்தின் 42 கோட்டப்பொறியாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, சாலைப்பணியாளர்களை கொண்டு நன்கு பராமரிக்கவும், பயணியர் மாளிகைகளை பராமரிக்க பகல் மற்றும் இரவு நேர காவலர் பணியிடங்கள் தேவைப்பட்டியலை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு கோட்டத்திலும் பராமரிக்கப்படும் சாலைகளின் கிமீ, சாலைப்பணியாளர் பணியிடங்கள், தற்போது பணியில் உள்ள சாலைப்பணியாளர்கள் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் சாலைப்பணியாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை விவரங்களை கோரி உள்ளார்.
அதேபோல் பயணியர் மாளிகைகளின் எண்ணிக்கை, காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் காவலர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் பயணியர் மாளிகை காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்களை கேட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Intha work epty try panarthu boos
ReplyDelete