படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. படித்த எல்லாருக்கும் வேலை கிடைப்பதில்லை. நிறுவனங்களும் தங்களுக்கு மிக மிகப் பொருத்தானவர்களையே வேலைக்கு எடுக்கின்றன. ஒரு நிறுவனத்தின் பணிக்கேற்ற திறமை உள்ளவர்களுக்கு வேலை கிடைத்து விடுகிறது. பணிக்கேற்ற திறமை எது? அதை எப்படி வளர்த்துக் கொள்வது? என்பது எல்லா மாணவர்களுக்கும் தெரிவதில்லை.
பொறியியல் படித்த மாணவர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதற்கு வழிகாட்டும்விதமாக கோயம்புத்தூரில் உள்ள "மாகன் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்றநிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஷ்ணுவிடம் பேசினோம்:
""கோவையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்து பயோ மெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றேன்.
படித்த பிறகு பலநிறுவனங்களில் வேலைக்காக முயற்சி செய்தேன். 17 நிறுவனங்கள் எனது வேலைக்கான விண்ணப்பத்தை புறக்கணித்துவிட்டார்கள். அதன் பிறகு, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஜூனியர் சேல்ஸ் அசோசியேட் வேலை. எனது படிப்புக்குத் தொடர்பில்லாத வேலை. அந்த வேலையை ஒன்றரை ஆண்டு காலம் செய்தேன். அதன் பிறகு வேலையை விட்டுவிட்டேன்.
என்னைப் போன்று படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பலரின் நிலை எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்ததே அதற்குக் காரணம்.
படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு, வேலைக்குத் தேவையான திறமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே காரணம். படிப்பைத் தவிர அவர்கள் துறைசார்ந்து வேறு எந்தெந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? அதற்கு நாம் எப்படி உதவ முடியும் என்று யோசித்ததில் உருவானதுதான் எங்களுடைய "மாகன் இன்னோவேஷன்ஸ் நிறுவனம்'.
நாங்கள் பொறியியல் படித்த மாணவர்களுக்கு - குறிப்பாக மெக்கானிகல், ஆட்டோமேடிவ், ஏரோஸ்பேஸ், பயோமெடிகல் துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு- பயிற்சி அளிக்கிறோம்.
பொறியியல் படித்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு வேலை தரக்கூடிய நிறுவனங்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தருகிறோம்.
தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு உரிய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்குப் பயிற்சி கொடுக்கிறோம். டிஜிட்டல் மேனுபேக்சரிங், டிசைன் என்ஜினியரிங், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறோம்.
எங்களைப் போன்று பயிற்சி அளிக்கும் பிற நிறுவனங்கள் இருந்தாலும், நாங்கள் அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறோம்.
உதாரணமாக ஒரு தொழிற்சாலை என்று எடுத்துக் கொண்டால், அங்கு நடைபெறும் உற்பத்தி, பணிகள், அதற்கான தேவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். பிற தொழிற்சாலைக்குரிய உற்பத்தி, பணிகள், அதற்கான
தேவைகள் வேறு மாதிரியாக இருக்கும். தொழில்நிறுவனங்களின் குறிப்பான தேவைகளை நாங்கள் முதலில் தெரிந்து கொள்கிறோம். அந்தத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய திறனுடையவர்களாக பொறியியல் படித்த மாணவர்களை நாங்கள் உருவாக்குகிறோம். இது ஒருபுறம்.
இன்னொருபுறத்தில், ஒரு மாணவரிடமிருந்து இன்னொரு மாணவர் படிப்பிலும் சரி, திறமைகளிலும் சரி, புரிந்து கொள்ளும் திறனிலும் சரி வேறுபடவே செய்வார். நாங்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறமை, கல்வியறிவு, புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுக்குப் பொருத்தமான பயிற்சிகளை அளிக்கிறோம்.
எனவே நாங்கள் தரும் பயிற்சிகளுக்கு என்று பொதுவான பாடத் திட்டம், செயல்முறைகள் என்று எதுவுமில்லை.
தனிப்பட்ட பொறியியல் படித்த மாணவருக்கும், தனிப்பட்ட ஒரு நிறுவனத்துக்கும் எவை தேவை என்பதைக் கண்டறிந்து அவற்றை நிறைவு செய்வதுதான் எங்களுடைய பணியாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை அப்டேட் செய்ய வேண்டிய பணியும் எங்களுக்கு இருக்கிறது.
இப்போது பொறியியல் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் நான்காமாண்டு பயிலும் போது செய்ய வேண்டிய புராஜெக்ட் பணியைக் கூட செய்யத் தெரியாமல் விழிக்கிறார்கள். புராஜெக்ட் பணியைச் செய்து தருவதற்கென்று உள்ள நிறுவனங்களிடம் காசு கொடுத்து புராஜெக்ட் வொர்க்கை முடித்து பட்டம் பெறுகிறார்கள். அப்படியானால் நான்காண்டுகள் படித்ததில் அவர்கள் கற்றுக் கொண்டது என்ன என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட திறமைக் குறைபாடுகளை நீக்குவதுதான் எங்களுடைய பணி.
எங்களுடைய குழுவில் நான், நிவேதிதா, கிருஷ்ண சந்திரன், சபீபா ஆகியோர் முக்கியமான நிர்வாகப் பணிகளைச் செய்கிறோம்.
முதலில் நாங்கள் தொடங்கியபோது 10 இலிருந்து 15 மாணவர்கள்தாம் எங்களிடம் பயிற்சி பெறச் சேர்ந்தனர். இப்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
கரோனா தொற்றின் காரணமாக ஆன்லைனிலேயே பயிற்சி தருகிறோம். வாய்ப்பு இருக்கும் சமயங்களில் நேரடிப் பயிற்சியும் தருகிறோம்.
15 மையங்களில் பிராக்டிகல் ட்ரெய்னிங் தருகிறோம்.
பெங்களூருவில் உள்ள தயானந்த சாகர் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங், திரிசூரில் உள்ள வித்யா அகாடெமி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மங்களூருவில் உள்ள கனரா என்ஜினியரிங் காலேஜ், கோவையில் உள்ள ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்பட பதினெட்டுக்கும் மேலான பொறியியல் கல்லூரிகளில் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.
ஆன்லைன் கல்விக்கான வாய்ப்பை கரோனா அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலம் கற்பதால், நேரடியாகக் கற்பதை விட பலமடங்கு குறைந்த கட்டணத்தை மாணவர்கள் செலுத்தினால் போதும். ஆன்லைன் மூலம் கற்றுக் கொடுப்பதால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இப்போது அதிகரித்திருக்கிறது.
எங்களிடம் பயிற்சி பெற்ற 3000-க்கும் அதிகமான மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு, பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் நிறுவனங்களுடனான தொடர்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது'' என்றார்.
No comments:
Post a Comment