கொரோனா தொற்று பரவலுக்கு பின் நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.டி. எனும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.
பலர் தற்போதைய நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்கு 70 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.பணியமர்த்தும் துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் ஆய்வறிக்கை வாயிலாக மேலும் தெரியவந்துள்ளதாவது:
கொரோனாவுக்கு முன் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க தொழில் வல்லுனர்கள் வேறு நிறுவனத்துக்கு வருவதற்கு 15 முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது அவர்கள் 50 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.தற்போது கேமிங் ஆரோக்கியம் கல்வி செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு என பல்வேறு வணிக பிரிவுகளில் அனுபவம்மிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே டி.சி.எஸ். உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமானோரை பணியமர்த்தி வருகின்றன. டி.சி.எஸ். நிறுவனம் ஜூன் காலாண்டில் மட்டும் 20 ஆயிரத்து 409 பேர்களை புதிதாக பணியமர்த்தி உள்ளது. இதுவும் தேவையை அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.அனுபவம் மிக்கவர்களுக்கு மட்டுமின்றி புதியவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் தேவைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment