உலகில் பெரியவர்கள்தான் கதை, நாவல், இலக்கியம் போன்றவைகளை எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. கிரிஸ்டோபர் போலினி என்ற 15 வயது சிறுவன் "ஈராகான்' என்ற தலைப்பில் முதல் நாவலை எழுதி சாதனை படைத்தது போல், உலகப் புகழ்பெற்ற "தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்' என்ற புத்தகத்தை ஆனி பிராங்க் எழுதிய போது அவளது வயது 15. அலெக்கிரிவென் என்ற 9 வயது சிறுவன் எழுதிய புத்தகத்தின் பெயர் "ஹெள டு டாக்டு கேர்ள்ஸ்'
என்பதாகும்.
சிறு வயதிலேயே தங்கள் கற்பனைத்திறன் மூலம் கதை, கவிதைகளை எழுதும் திறமைசாலி குழந்தைகள் உலகில் நிறைய பேர் உள்ளனர். இப்படி கதை எழுதும் திறமை பெற்ற குழந்தைகளை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் படைப்புகளை வெளியிடுவதற்காகவும் 2019 -ஆம் ஆண்டு நிதி மிஸ்ரா, "புக்கோஸ்மியா' என்ற டிஜிட்டல் தளம் ஒன்றைத் தொடங்கினார். முதலில் வாரத்திற்கொரு முறை குழந்தைகள் எழுதும் கதைகளில் ஒன்றை வெளியிடுவதென தீர்மானித்தார்.
வெகு விரைவில் புக்கோஸ்மியா வாசகர்களிடமும், குழந்தை எழுத்தாளர்களிடமும் பிரபலபமாகவே, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் 110 இடங்களிலிருந்து கதைகள் வரத் தொடங்கின. பின்னர் தினமும் ஐந்து கதைகள் வீதம் வெளியிடத் தொடங்கினார். இதுவரை, 1,500 குழந்தை எழுத்தாளர்களின் கதைகள் புக்கோஸ்மியா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிவுள்ளது.
தொடக்கத்தில் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை பதிப்பகம் ஒன்றின் மூலம் வெளியிட வேண்டுமென்று நினைத்த நிதிமிஸ்ரா, ஏற்கெனவே குழந்தைகளுக்காக பிரபல எழுத்தாளர்கள் ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள நிலையில் புதிதாக ஏதாவது செய்யலாமே என்று கருதினாராம். இளம் குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்கள் எழுதும் கதைகளை குழந்தைகளே விரும்பி படிக்கும் வகையில் டிஜிட்டல் தளம் தொடங்கலாமே என்ற எண்ணம் தோன்றவே, உடனே புக்கோஸ்மியாவை அறிமுகப்படுத்தினார்.
குழந்தைகளுக்காக குழந்தைகளே கதை, கவிதை, கட்டுரை என்று அவர்கள் கற்பனையில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று அறிவித்தார்.
குழந்தைகள் எழுதி அனுப்பும் படைப்புகளை பரிசீலனை செய்ய குழு ஒன்றை அமைத்தார். கதைகள் இலக்கணப்படி யோ, வார்த்தைகள் கோர்வை இன்றியோ, எழுத்துப்பிழைகள் இருந்தாலோ பரவாயில்லை.
தங்கள் கற்பனையில் தோன்றுவதை அப்படியே எழுதி அனுப்பலாம் என்ற நிபந்தனையுடன் எழுத அனுமதித்தார்.
வந்த கதைகளில் வெளியிட சிறந்ததென கருதப்பட்ட கதைகளை இவரது குழுவினர் எடிட் செய்து வெளியிட்டனர். வாசகர்கள் மட்டுமின்றி குழந்தை எழுத்தாளர்கள் வரவேற்பும், எண்ணிக்கையும் அதிகரித்தது.
சில குழந்தைகள் படங்களையும் வரைந்து கதைகளை அனுப்பியிருந்தனர்.
அவைகளில் சிறந்தவைகளைத் தேர்வு செய்து "யங் வாய்ஸஸ் அகெய்ன்ட்ஸ் டிஸ்கரிமினேஷன்' என்ற தலைப்பில் புக்கோஸ்மியா டிஜிட்டல் தளத்திலேயே இ- புத்தகமாக வெளியிட்டபோது ஏராளமான அளவில் பாராட்டுகள் குவிந்ததாம்.
""இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் உண்மையிலேயே கருத்தாழம் கொண்டவை, குழந்தைகள் மன ஓட்டத்தை வெளிப் படுத்தியிருப்பதோடு சிறந்த எழுத்தாளர்களாக உருவாக முடியுமென்ற நம்பிக்கையையும் அளித்துள்ளது'' என்று நிதிமிஸ்ரா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment