ராணுவத்தில் சேர என்ன செய்ய வேண்டும்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 6, 2021

ராணுவத்தில் சேர என்ன செய்ய வேண்டும்?

இந்திய நாட்டின் ராணுவப் படைகளில்  வேலைக்கு தகுதியான ஆள்களைத் தேர்வு செய்யும் நடைமுறை, முழுமுழுக்க தகுதி அல்லது நுழைவுத் தேர்வின் மூலம் நடக்கிறது. முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியம் (சர்வீஸ் செலக்ஷன் போர்டு - எஸ்எஸ்பி) நடத்தும் நுழைவுத் தேர்வுகள் 5 நாள்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, 

உளவியல் தேர்வு மற்றும் நேர்காணலை உள்ளடக்கியதாக நுழைவுத் தேர்வு அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அதன் முடிவில், ராணுவப் படைகளில் பணியாற்ற தகுதி  படைத்தவர்களின் 
பட்டியல் வெளியிடப்படும். 

பணி சேர்க்கைக்கான திட்டத்தைப் பொருத்து, நிரந்தர அல்லது குறுகிய கால சேவையில் நியமிக்கப்படுவார்கள்.

ராணுவப் படைகளில் பணியாற்ற தகுதி பெறுவதற்கான பல்வேறு வழிகள்:

தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தேர்வு:

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 16 -19 வயதுக்கு உள்பட்டவர்கள் 11-ஆம் வகுப்புக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு அகாதெமி நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

இந்திய கடற்படை/விமானப்படையில் பணியில் சேர்வதற்கு தகுதி பெற, 10 + 2 பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இயற்பியல், வேதியியல், கணிதத்தை கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். 

தேர்வில் தெரிவுவிடை வினாக்களுடன் (அப்ஜெக்டிவ் டைப்)  கூடிய 2 தேர்வுத் தாள்கள் இருக்கும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.  

முதல் தேர்வுத் தாள் 300 மதிப்பெண்களுக்கான கணித பாடத்திற்கானது ஆகும். 
இரண்டாவது தேர்வுத்தாள் 600 மதிப்பெண்களுக்கான பொதுத்திறனறி தேர்வு (ஜிஏடி) ஆகும். இரண்டாவது தாளில், ஆங்கிலம், அறிவியல், மனிதநேயவியல் மற்றும் தற்போதைய பிரச்னைகள் குறித்த பொது அறிவு தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். 

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முப்படைகளுக்கான சேவைத் தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தொழில்நுட்ப ஆள்தேர்வு திட்டம்:

தொழில்நுட்ப ஆள்தேர்வு திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் சேர பொருத்தமான விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 12-ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு, 16 - 19 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் தகுதி பெற, 10 + 2 தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் குறைந்தபட்சம் 70% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப ஆள்தேர்வு திட்டத்தில் (டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் - டிஇஎஸ்) எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லை. ஆனால், காலி 

பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதியின் அடிப்படையில் முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியத்தின் (எஸ்எஸ்பி) தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு:

இந்திய ராணுவ அகாதெமி (இந்தியன் மிலிட்ரி அகாடமி - ஐஎம்ஏ), அதிகாரிகள் பயிற்சி அகாதெமி (ஆபீசர்ஸ் ட்ரெய்னிங் அகாடமி - ஓடிஏ), இந்திய கடற்படை அகாதெமி (இந்தியன் நேவல் அகாடமி - ஐஎன்ஏ)  மற்றும் இந்திய விமானப்படை அகாதெமி (இந்தியன் ஏர் போர்ஸ் அகாடமி - ஐஏஎஃப்ஏ) ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவே ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (தி கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸ் - சிடிஎஸ்)  நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. 

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்படுகிறது. 19-24 வயதுக்கு உள்பட்டவர்கள், பட்டப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம். 

ஐ.என்.ஏ மற்றும் ஐ.ஏ.எஃப்.ஏ-இல் சேர்க்கை பெற தகுதி பெறுவதற்கு, 10+ 2 பாடத்திட்டத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடத்தை கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். 

தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். 

தெரிவுவிடை வினாக்கள் (அப்ஜெக்டிவ் டைப்) கொண்ட மூன்று வினாத்தாள்கள் கொண்டதாக தேர்வு அமைந்திருக்கும். வினாத்தாள்-1-இல் 100 மதிப்பெண்களுக்கான ஆங்கிலமொழி பாடமும், வினாத்தாள்-2-இல் 100 மதிப்பெண்களுக்கான பொது அறிவு பாடமும், வினாத்தாள்-3-இல் 100 மதிப்பெண்களுக்கான கணித பாடமும் இடம்பெற்றிருக்கும். 

குறுகியகால சேவை ஆணையத்தின் (ஷார்ட் சர்வீஸ் கமிஷன் - எஸ்எஸ்சி)  அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ)  சேர்வதற்கு, விண்ணப்பதாரர்கள் வினாத்தாள்-1 மற்றும் வினாத்தாள்-2-ஐ மட்டுமே எழுத வேண்டும். 

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முப்படை சேவைகளுக்கான தேர்வு வாரியத்தின் ஆள்சேர்ப்பு நடைமுறையில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவர். 

திருமணமாகாத ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் இருவரும் சி.டி.எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இருப்பினும், பெண் வேட்பாளர்கள் அதிகாரிகள் பயிற்சி அகாதெமியைத் தேர்வு செய்ய மட்டுமே தகுதியுடையவர்கள்.

தொழில்நுட்ப பட்டதாரி படிப்பு:

தொழில்நுட்ப பட்டதாரி படிப்பின் (டெக்னிகல் கிராஜுவேட் கோர்ஸ் -டிஜிசி) கீழ் இந்திய ராணுவத்தில் சேர ஆண்டுக்கு இரண்டு முறை தகுதியான ஆள்கள் சேர்க்கப்படுகிறார்கள். தேவைப்படும் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்து வரும், 20-27 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். 

டி.ஜி.சி ஆள்சேர்ப்பில் எந்த நுழைவுத் தேர்வும் இல்லை. ஆனால் தகுதி மற்றும் காலி பணியிடங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முப்படை சேவைகளுக்கான வாரிய ஆள்சேர்ப்பு செயல்முறைப்படி கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுகிறார்கள். திருமணமாகாத ஆண் வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

பல்கலைக்கழக ஆள்சேர்ப்பு திட்டம்:

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 19-25 வயதுக்கு உள்பட்டவர்கள் மற்றும் தேவைப்படும் பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், 3-ஆம் ஆண்டின் இறுதித் தேர்வுக்கு முந்தைய தேர்வில் (5-ஆவது பருவத் தேர்வு வரை) பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60%  பெற்றவர்கள், பல்கலைக்கழக ஆள்சேர்ப்புத் திட்டத்தின் (யூ.இ.எஸ்.) கீழ் இந்திய ராணுவம் / கடற்படையில் சேர விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். 

தகுதி படைத்த விண்ணப்பதாரர்கள் தங்களை வளாகத் தேர்வு செயல்முறைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் முப்படை சேவைகளுக்கான தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.பி.) நடைமுறைகளில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள். திருமணமாகாத ஆண் வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

டி.ஜி.சி. கல்வி - ராணுவ கல்வி பயிற்சி:

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி, தேவைப்படும் முதுகலை பட்டம் பெற்ற எம்.ஏ / எம்.எஸ்.சி / எம்.காம் / எம்.சி.ஏ. தேர்வுகளில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 23- 27 வயதுக்கு உள்பட்டவர்கள், ராணுவ கல்வி பயிற்சியின்  கீழ் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 

தகுதி மற்றும் காலி பணியிடங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முப்படை சேவைகளுக்கான தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.பி.) நடைமுறைகளில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள். திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஆள்சேர்ப்பு:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேவையான மூன்று அல்லது ஐந்து 
ஆண்டுக்கான எல்.எல்.பி. பட்டம் பெற்ற, 21-27 வயதுக்கு உள்பட்டவர்கள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் (ஜாக்) பிரிவின்கீழ் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். திருமணமாகாத ஆண், பெண் இருபாலினத்தவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

விமானப்படை பொதுச் சேர்க்கை தேர்வு:

இந்திய விமானப்படையில் பணியாற்றுவதற்கு விமானப்படை பொதுச்சேர்க்கை தேர்வு (ஏர் போர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட் - ஏஎஃப்சிஏடி)  மூலம் இந்திய விமானப்படை அழைப்பு விடுக்கிறது. 

பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்து கொண்டிருப்போர் அல்லது பட்டப்படிப்பை (தொழில்நுட்பப் பணிக்கு பி.இ./பி.டெக்., கணக்கியல் பிரிவுக்கு பி.காம்.) வெற்றிகரமாக முடித்தவர்கள், பறக்கும் பிரிவுக்கு 20-24  வயதுக்கு உள்பட்டவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.  களப்பணிக்கு(தொழில்நுட்பம், கணக்கியல் மற்றும் நிர்வாகம்) 20-26 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.  

தவறான விடைக்கு மதிப்பெண்களை குறைக்கும் நடைமுறையுடன் தெரிவுவிடை வினாக்கள் கொண்டதாக தேர்வு அமைந்திருக்கும். இத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கானது. ஆங்கில மொழி, அறிவுத் திறன், பொதுஅறிவு ஆகியவை கொண்டதாக வினாத்தாள் இருக்கும். அதே நேரத்தில் தொழில்நுட்பக் கிளைக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு மற்றொரு வினாத்தாளை எழுத வேண்டும். 

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முப்படை சேவைகளுக்கான தேர்வு வாரியத்தின் ஆள்சேர்ப்பு நடைமுறையில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள். திருமணமாகாத ஆண், பெண் இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

No comments:

Post a Comment