நடமாடும் வாகனங்கள் மூலம் மலைக்கிராம மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க நடவடிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 14, 2021

நடமாடும் வாகனங்கள் மூலம் மலைக்கிராம மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க நடவடிக்கை

கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள பழங்குடியினர் நல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 



ஆனால் இந்த வசதிகள் சில மலைக்கிராமங்களில் இருக்கும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் கல்வியை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகளுக்காக நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டத்தை அரசு மேற்கொள்ள இருக்கிறது. இதுதொடர்பாக பழங்குடியினர் நல இயக்குனரகத்தின் இயக்குனர் வி.சி.ராகுல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, தர்மபுரி பழங்குடியினர் நலம் திட்ட அலுவலர் மற்றும் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, பெரம்பலூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, வேலூர், விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 



 மலைக்கிராம மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாத நிலையில் உள்ளதால், மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் பொருட்டு நடமாடும் வாகனங்களை கொண்டு மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு தினசரி பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்திட கீழ்க்கண்டவற்றை பின்பற்றவேண்டும். அதன் விவரம் வருமாறு:- 



மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை கண்டறிந்து அக்கிராமங்களிலுள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பித்திட ஏதுவாக சிறிய வாகனம் வாயிலாக பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்திடும் நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்திடவும், அதற்கான செலவினத்தொகை மாவட்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் பட்டியல்களின் அடிப்படையில் வழங்கப்படும். 



உள்ளூர் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் பாடம் கற்பிப்பதற்காக ஏற்கனவே பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பாசிரியர்களாக பணிபுரிந்த உள்ளூர் ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்தும்பொருட்டு, மலைக்கிராமங்களில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு தினசரி கிராமம் வாரியான கால அட்டவணை தயார் செய்து நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment