பளபள சருமத்திற்கு பன்னீர்!
.
பார்ப்போரின் கண்களுக்குப் பரவச உணர்வைத் தரக்கூடிய அழகு சாதனப்
பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு. சமையல் தொடங்கி சருமப் பராமரிப்பு
வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும் பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்வைக்கு!
சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும்
வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்
பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு
பெறுவதோடு, புதுப்பொலிவையும் பெறும்.
கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு.
முகத் தழும்புகள், தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சிளைகளுக்கு பன்னீர்
அருமருந்து. சூரியக் கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சினைகள் நீங்க, பன்னீருடன் கற்றாழை
ஜெல்லைக் கலந்து சருமத்தில் தேய்த்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால்
முகம் பொலிவு பெறும்.
உதடுகள் ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க,
பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால்
உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து, அழகுக்கு அழகு சேர்க்கும்.
பன்னிருடன் வெந்தய விழுதையும், கிளிசரினையும் சேர்த்து கலந்து, முடியின் வேர்
பகுதியில் தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால்,
பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.
பன்னீருடன் சந்தனப் பொடி, தேன் சேர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில்
தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளமை உங்கள் உடலில் இளைப்பாறுவதை
உணரலாம்.
சாதாரண பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து வீட்டிலேயே சுத்தமான பன்னீரை
எளிமையாக தயாரிக்கலாம். இதோ செய்முறை:
ஒரு லிட்டர் நீரைக் கொதிக்கவைத்து, அதன் சூடு ஆறும் முன்னர் 15 கிராம் ரோஜா
இதழ்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மூடியைத்
திறந்தால் நீர் வெளிர் பிங்க் நிறமாக மாறி இருக்கும். ஆறிய பிறகு வடிகட்டி பாட்டிலில்
ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் பன்னீருடன் சிறிதளவு
கிளிசரின் சேர்த்து கலந்து தடவி வந்தால், முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
வெயில் காலங்களிலும், குளிர் காலங்களிலும் ஏற்படுகின்ற சரும பிரச்சினைகளுக்கு இது
நல்லதொரு தீர்வாகும்.
No comments:
Post a Comment