நாட்டிலேயே முதல் முயற்சியாக பெங்களூரு அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோள் தயாரிக்கிறார்கள் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
நாட்டிலேயே முதல் முயற்சி
கர்நாடக அரசு பள்ளிகளுக்கு ஒரு அறக்கட்டளை இலவசமாக மடிகணினிகளை வழங்கும் நிகழ்ச்சி மல்லேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு அந்த மடிகணினிகளை பெற்றுக் கொண்டு பேசும்போது கூறியதாவது:-
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளி, செயற்கை கோளை தயாரிக்கிறது. அரசு பள்ளிகள் அளவில் செயற்கை கோளை தயாரிப்பது என்பது நாட்டிலேயே முதல் முயற்சி ஆகும். அடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழாவையொட்டி 75 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்த திட்டத்தில் இந்த அரசு உயர்நிலைப்பள்ளியும் இணைந்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை
பொதுவாக பொறியியல் படிக்கும் மாணவர்கள் தான் செயற்கைகோள்களை தயாரிப்பார்கள். ஆனால் பெங்களூரு மல்லேஸ்வரம் 18-வது கிராசில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளி மாணவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு இஸ்ரோ அமைப்பு உதவிகளை செய்து வருகிறது. இதே பள்ளியில் தான் செயற்கைகோள் தயாரிக்கப்படுகிறது. சமீபகாலமாக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கையைவிட தரமான கற்பித்தல், கற்றல் தான் மிக முக்கியம். தரமான கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களுடன் அரசு கல்வி நிலையங்கள் போட்டி போட வேண்டும். கர்நாடகத்தில் இதுவரை 65 சதவீத கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
No comments:
Post a Comment