குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 30, 2021

குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.12.96 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். 




அதன்பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ''💢பள்ளிகள் தற்போது செயல்படாத நிலையில், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களது பிள்ளைகளும் வேலைக்குச் செல்வதாகத் தெரிகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிக்கக்கூடாது என்றும், அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர். 



அதேவேளையில், பள்ளியில் இருந்து இடைநின்று, வேலைக்குச் செல்லும் மாணவ- மாணவிகளைக் கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைள் கல்வித் துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளில் 65 சதவீதம் பேர்தான் ஆன்லைன் முறையில் கல்வி பெறுகின்றனர். சில இடங்களில் ஆசிரியர்கள் நேரில் சென்று குழுவாக மாணவ- மாணவிகளை அமர வைத்து வகுப்பு நடத்தி வருகின்றனர். சில கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி மிகவும் குறைவாக உள்ள நிலை உள்ளதால், மாநிலத் தகவல்தொடர்புத் துறை அமைச்சரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. 



அப்போது, தொலைத்தொடர்பு சேவை குறைவாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை அளித்தால், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். பள்ளிகளில் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து மாணவ- மாணவிகள் புகார் அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது. புகார்களை அந்தப் பெட்டியிலோ அல்லது அரசின் இலவச உதவி மையத்தை 14417 என்ற எண்ணிலோ தெரியப்படுத்தலாம். 



பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படும்''. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 💢சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமத், ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment