கரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களிலும் ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடியுள்ளன. இணையவழி வகுப்புகள் இயல்பாகிவிட்டாலும், பழங்குடியின மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது.
அத்தகைய குழந்தைகளுக்கும் இணையவழிக் கல்வியை சாத்தியப்படுத்தும் வகையில் கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலைக் காடுகளில் மலம்பண்டாரம் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் கரோனா ஊரடங்கால் கல்வி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் அட்டத்தோடு பகுதியில் உள்ள அரசுப் பழங்குடியின எல்.பி. பள்ளியின் வாகனம் மூலம் இந்தப் பழங்குடியின மாணவர்கள் அன்றாடம் ஓர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கே கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கே சில மணி நேரம் கல்வி கற்றுவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் திருப்பி அவர்களின் கிராமப்பகுதியில் இறக்கிவிடப்படுகின்றனர்.
பத்தனம்திட்டா மாவட்ட பழங்குடியின மக்கள் வளர்ச்சி அதிகாரி எஸ்.எஸ்.சுதீர் இது குறித்து கூறுகையில், "பலப்பில்லியில் இருந்து சாலக்காயம் வரையிலான பகுதியில் ஏராளமான பழங்குடிகள் வசிக்கின்றனர். அப்பகுதியில் பல இடங்களில் இன்னும் மின்சார வசதி கூட கிடைக்கவில்லை.
அப்படியிருக்கும் போது இணையவழிக் கல்வி என்பது அவர்களுக்கு வெறும் கனவு தான். ஆகையால் தான் அவர்களின் குழந்தைகளுக்காக இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். பள்ளிப் பேருந்தை இயக்கும் செலவும் ஓட்டுநரின் ஊதியம் என அனைத்தையும் பழங்குடியின மேம்பாட்டுக் கழகத்தின் கோத்ரா சாரதி திட்டத்தின் மூலம் மேற்கொள்கிறோம்.
தினமும் காலையில் 8.45 மணிக்கு மாணவர்களை பலப்பில்லி மற்றும் சாலக்காயம் பகுதிகளில் இருந்து ஏற்றிக் கொள்கிறோம். பின்னர் 10 மணிக்கு வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.
2 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு KITE Victers சேனலின் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. பின்னர் 12.45 மணிக்கு மீண்டும் மாணவர்களை இறக்கிவிடுகிறோம். மாணவர்களும் தினமும் 100 கி.மீ தூரத்தை ஆர்வத்துடன் பயணித்து கல்வி கற்கின்றனர்" என்றார்.
இதற்காக, ரண்ணி பெருநாடு பஞ்சாயத்து சார்பில் மாணவர்கள் கல்வி கற்க மின்சாரம் மற்றும் இணைய வசதி செலவு மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில் பலப்பில்லி அருகேயே கற்றல் மையத்தைத் திறக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment