கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
பெருந்தொற்று காலம் என்பதால் பள்ளிகள் அனைத்தும், வகுப்புகள் நடைபெறாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கிராமங்களுக்கு (திருநாவலூர், கெடிலம், மாரனோடை, சேந்தமங்கலம், மேட்டத்தூர், மைலங்குப்பம், ஈஸ்வரகண்டநல்லூர், வைப்பாளையம்) நேரடியாக சென்று பாடம் எடுத்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேவையான கற்றல் கையேடுகள், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு கால அட்டவணைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் போன்றவற்றையும் வழங்கினர். தமிழக அரசின் உத்தரவின்படி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது, எனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் பற்றியும் பெற்றோர்களிடம் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகளையும், கொரோனா தடுப்பூசி போடவேண்டிய அவசியம் பற்றியும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதை அனைத்தையும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே.இளங்கோதை அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகிறார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயல்களினால், மாணவர்களுக்கு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனை பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்று ஆசிரியர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment