தேர்வு செய்யுங்கள்... சிறந்த கல்லூரியை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 10, 2021

தேர்வு செய்யுங்கள்... சிறந்த கல்லூரியை!

கரோனா தொற்று காரணமாகஉலகமே முடங்கிக் கிடக்கிறது. கல்வித்துறையில் கரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் கொஞ்சம்நஞ்சமல்ல. இருப்பினும் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வீடுகள் வகுப்பறைகளாக மாறிவிட்டன. பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், பிளஸ் டூ மதிப்பெண்பட்டியல் பல வழிகளில் கல்வியாளர்கள் கூறிய ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. 




 பிளஸ் டூ மதிப்பெண் வெளியிடப்பட்ட பின்னர் பொறியியல் கல்லூரிகள் முதல் கலை அறிவியல் கல்லூரிகள் வரை அனைத்திற்கும் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை மாணவர்கள் நாள்தோறும் அனுப்பி வருகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்களை சில பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகத்தினரும், சில பாலிடெக்னிக் கல்லூரிகளின் நிர்வாகத்தினரும் வீடு தேடி வந்து சந்தித்து தங்கள் கல்லூரியில் சேர்வதற்கு அழைப்புவிடுக்கின்றனர். 



தங்களுடைய கல்லூரியில் சேர்ந்தால் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைத் தெரிவிக்கின்றனர். அப்படி கல்லூரிகளிலிருந்து வருபவர்கள் சொல்லும் விஷயங்களை மாணவர்களும், பெற்றோர்களும் கேட்டுக் கொள்ள வேண்டும். அத்துடன் இணையதளங்களின் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இதை மட்டும் வைத்து அந்த கல்லூரியில் சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து விடக்கூடாது.



 இணையதளங்களில் வரும் தகவல்கள் முழுமையான நம்பகத்தன்மையுடன் இருக்குமா? என்பது சந்தேகம்தான். மேலும் கட்செவி அஞ்சல், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வரும் கல்லூரி தொடர்பான தகவல்களையும் கண்டிப்பாக அலசி ஆராய வேண்டும். இன்றையச் சூழ்நிலையில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளில், பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாகவே இருந்து வருவதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். 



எனவே, பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ள முடியும் . ஆனால், அது சரியான முடிவு அல்ல. நல்ல கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிகழாண்டில் பொறியியல் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. 



இதனால் கடந்த ஆண்டை விட தற்போது கட்ஆஃப் மதிப்பெண்கள் நிலை நிச்சயம் மாறுபடக்கூடும். கடந்த ஆண்டைவிட ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண்கள் தேவைப்படலாம். எனவே கடந்த ஆண்டுகளில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தேவைப்பட்ட மதிப்பெண்களின் விவரங்களைத் தொகுத்து எடுத்து வைத்து கொள்வது நலம் பயக்கும். இப்போது அறிவியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் என தொழில் நுட்பங்கள் பெருகிவருவதால் பொறியியல் பிரிவுகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 



 பொறியியல் பாடப்பிரிவுகள் பல இருந்தாலும், எந்தப் பாடப் பிரிவிற்கு தற்போது வேலை வாய்ப்பு உள்ளது? அந்தப் பாடப் பிரிவை எந்தக் கல்லூரியில் சிறப்பாகக் கற்பித்து வருகிறார்கள்? என்பதையெல்லாம் ஆய்வு செய்து குறிப்பிட்ட பாடப்பிரிவை, அதைக் கற்றுத் தரும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். பொறியியல் கல்லூரிகளை போல் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகளும் இப்போது அதிகமாகிவிட்டன. 



எந்த கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், முதலில் அந்த கல்லூரியில் ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களிடம், அந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, பேருந்து வசதி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள், அனைத்து வகுப்பிற்கும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் போதுமான பேராசிரியர்கள் இருக்கிறார்களா? என்பன போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். 



விடுதியில் சேர்ந்து தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதியின் கட்டமைப்பு வசதி, விடுதியில் வழங்கப்படும் உணவுமுறை போன்றவற்றை அங்குள்ள மாணவர்களிடம் கேட்ட பின்னரே அக்கல்லூரியில் சேர்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். கல்லூரியில் நூலக வசதி எவ்வாறு இருக்கிறது? அங்கு தேவையான புத்தகங்கள் உள்ளனவா? என்பதை ஆராய்ந்து சேர்வது நன்மை பயக்கும். இனிவரும் காலங்களில் ஆன்லைன் கற்பித்தல் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. 



எனவே ஆன்லைன் மூலம் கற்பித்தலை நடத்துவதற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகள் ஒருகல்வி நிறுவனத்தில் உள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது சிறப்பானதாக அமையும். உலக அளவில் புகழ்பெற்ற கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மட்டும் வழங்குவதில்லை. எதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன. 



இதன் மூலம் மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அத்தகைய பல் திறன்களை வளர்ப்பதற்கான பட்டறைகளை வைத்துள்ள கல்லூரிகளில் சேர்வது நல்லது. எதிர்கால வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய தேவை பணம். படித்து முடித்தவுடன் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவதில் தான் எல்லோருமே முனைப்பு காட்டுவர். 



படிப்பதற்காக பல வருடங்கள் செலவிட்ட பின்னர் வேலை தேடுவதற்கு பல வருடங்களைச் செலவிட்டால் பொருளாதாரத்தில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் கல்லூரியைத் தேடிப் பிடித்து சேர வேண்டும். இப்போது பல கல்வி நிறுவனங்கள் வளாகத் தேர்வினை நடத்தி தங்கள் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்றன. எனவே அத்தகைய கல்வி நிறுவனங்களை தேடிப்பிடித்து சேர்வது நல்லது.

No comments:

Post a Comment