தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.
அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டுக்கான அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 அன்றைய நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதற்காக மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு மாதிரி, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும், தமிழ், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் முழுவிவரங்களையும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment