மத்திய அரசு ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் நடக்க இருப்பதை அடுத்து, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, இந்த தகுதித் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16ம் தேதி மற்றும் 2022 ஜனவரி 13ம் தேதிகளுக்கு இடையே எந்த நேரமும் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வு கணினி வழியில் 20 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் பெறும் போது தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள்தெரிவிக்கப்படும். இந்த தேர்வுக்கு இன்று தொடங்கி அக்டோபர் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 20ம் தேதி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தாங்கள் கட்டணம் எந்த பிரிவின் கீழ் செலுத்த விரும்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் கட்டணம் செலுத்துவதற்கான பிரிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஒரு தாள் எழுத விரும்பினால் ரூ.1000, இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத விரும்பினால் ரூ.500, இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். ஆசிரியர் பணிக்கான தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுநடக்கும் முறை குறித்த விவரங்கள் அனைத்தும் இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment