இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வான, மிக நீண்ட சந்திர கிரகணம் நாளை (நவ.19) நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித் துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும்ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன.
அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும்.
சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
அந்தவகையில் இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் நாளை (நவ.19) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 11.32 முதல் மாலை 5.34 மணி வரை (6.02 மணி நேரம்) கிரகணம் நிகழும்.
580 ஆண்டுகளுக்குப் பின்
இதற்குமுன் நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்.18-ம்தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் நெடிய கிரகணம் தோன்ற உள்ளது.
இத்தகைய நிகழ்வு மீண்டும் 2669-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, வடக்குமற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடி யும்.
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும்.
தமிழகம் உட்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment