குப்பை மேடுகளை பார்த்திருப்போம். அது என்ன குப்பை காடுகள்? என கேட்கலாம்.
ஒரு வகையில் காடுகளுக்கும் குப்பை காடுகளுக்கும் பெரிய தொடர்பு உண்டு. குப்பைமேடுகள் என்பவை ஒரு செயல்முறையின் இறுதி இலக்குகள் என்றால், அவை தொடங்கும் இடங்கள் எவை? அதேபோல் குப்பை உருவாக்கப்படும் இடமும், அது கொண்டுசென்று கொட்டப்படும் இடமும் ஒன்றல்ல என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
பெரும் பணக்காரர்கள் உருவாக்கிய குப்பையெல்லாம் ஏழ்மையில் உழலும் மக்கள் வாழும் நகரங்களில், ஒதுக்குப்புறங்களில்தான் கொட்டப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, செல்வந்த நாடுகளின் குப்பைத் தொட்டிகளாக சில நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உருவாக்கும்போதே திரும்பவும் பயன்படுத்த முடியாதபடிதான் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு பொருளைத் திரும்பவும் சரிசெய்து பயன்படுத்த முடியும் என்றாலோ, அவற்றின் பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றை வேறு வழிகளில் பயன்படுத்த முடியும் என்றாலோ சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம் குறைந்துவிடும் அல்லவா...!
ஆகவே, பயன்படுத்தி, தூக்கியெறியும் பொருட்களை மட்டுமல்லாமல், அந்த மனப்பான்மையையும் மக்களிடையே வெற்றிகரமாக உற்பத்தி செய்துவிடுகிறார்கள்.
இந்தியாவின் சில மாநிலங்களில் இன்று குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் செய்திகளைப் பார்க்கிறோம்.
பல மாநிலங்களில் ஏரிகள், அணைகளில் வழக்கமான கொள்ளளவில் பாதிக்கும் குறைவாக மட்டுமே தற்போது நீரைக் கொண்டிருக்கின்றன. இவையும் நமக்கு ஆச்சரியமூட்டும் தகவல்களாகவே இருக்கின்றன. ஆனால், 2025-ல் உலகின் நான்கில் மூன்று பங்கு மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என்றும், அதற்கு அழிந்து போகாத குப்பைகளும் ஒரு காரணமாக இருக்கும் எனவும் சில ஆய்வுத்தகவல்கள் எச்சரிக்கின்றன.
No comments:
Post a Comment