பெற்றோர் முன்னிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பள்ளிக்கல்வி துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் முன்னிலையில் மாணவ - மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கை
கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு வந்த நிலையில், அடுத்ததாக 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
அதன்படி 15 வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* அரசின் உத்தரவுப்படி நடப்பு கல்வியாண்டில் 3.1.2022 (இன்று) முதல் பள்ளி வளாகத்திலேயே அரசு டாக்டர்களால் அனைத்து வகை பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் (15 முதல் 18 வயதுடைய) மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
* இப்பணி தொடர்பாக அரசு டாக்டர்களால் தொடர்புடைய பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களை தொலைபேசி வாயிலாகவோ, நேரிலோ தொடர்பு கொள்ளும்போது போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பெற்றோர் முன்னிலையில் தடுப்பூசி
* தடுப்பூசி செலுத்துவதற்கான குறிப்பிட்ட தேதியில் மாணவர்களை பள்ளிக்கு தவறாது வருவதற்கு அறிவுறுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
* மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நாளில் அவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு வருவதற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மருத்துவத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களையும் அந்த நாளில் மாணவர்களோடு வரச்சொல்லி தகவல் கொடுத்து அவர்கள் முன்னிலையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
* மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பள்ளி அமைந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் அளித்து, அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்
* தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பள்ளியில் இணைய வசதியுடன் மேஜை கணினி அல்லது மடிக்கணினியில் கணினி இயக்கத்தெரிந்த ஆசிரியரால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மாணவ - மாணவிகள் விவரங்களை இணையத்தில் உள்ளீடு செய்யும் பணியை அன்றே மேற்கொள்ள வேண்டும்.
* இப்பணிகளை ஒருங்கிணைக்க பள்ளி அளவில் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும்போது அரசால் வழங்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள் முடிக்க இலக்கு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாதத்துக்குள் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 லட்சத்து 78 ஆயிரத்து 23 முன்கள பணியாளர்கள், 5 லட்சத்து 65 ஆயிரத்து 618 சுகாதார பணியாளர்கள், 60 வயதை கடந்த இணை நோயுள்ள முதியோர்கள் 20 லட்சத்து 83 ஆயிரத்து 800 பேருக்கு ஜனவரி 10-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment