மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓரளவுக்கு முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? அதற்காக கல்லூரிகளில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்? என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை மருத்துவ கல்வி இயக்குனரகம், அந்தந்த மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* தேசிய மருத்துவ கமிஷன் வழிகாட்டுதல்படி, 2021-22-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 14-ந் தேதி (நாளை) முதல் தொடங்க வேண்டும்.
* அதன்படி, கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடத்தைகள் பின்பற்ற வேண்டும். உணவு கூடங்களில் 50 சதவீதம் மட்டுமே எந்த நேரத்திலும் மாணவர்கள் இருக்க வேண்டும்.
தடுப்பூசி
* அதேபோல் நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் அனுமதியின்றி விழாக்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது.
* வகுப்பறைகளில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும்.
எந்த கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது
* அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்ற மாணவர்களிடம், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உள்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், காப்பீடு உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் வசூலிக்கக்கூடாது. கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இந்த ஆண்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு பின்பற்றவேண்டும்.
* மேலும், 7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு அரசாங்கம் அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்துவதால், எந்தவிதமான கல்வி உதவித்தொகைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment