பிப்ரவரி 28-ந் தேதி, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அறிவியல் ஆராய்ச்சிகளின் தேவை பற்றியும், ஆராய்ச்சியாளர்களின் அவசியம் குறித்தும் விளக்கமாக பேசுகிறார், பேராசிரியர் வின்சென்ட். சென்னையை சேர்ந்த இவர் உயிரியல் துறையில் முன்னெடுத்த பல ஆராய்ச்சிகளுக்காக ‘தமிழக விஞ்ஞானி விருது’, ‘தமிழக மூத்த விஞ்ஞானி விருது’ மற்றும் ‘சுற்றுச்சூழல் விருது’ என தமிழ்நாடு அரசின் 3 முக்கிய விருதுகளை பெற்றவர். அதோடு சென்னை வெள்ள தடுப்பு உத்திகளை வகுத்து தந்தது, நோய் பரவல் தன்மையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்தது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய வகையில் பல செயல்திட்டங்களை உருவாக்கியது உள்ளிட்ட திட்டங்களுக்காக அரசின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
மூத்த ஆராய்ச்சியாளரான இவர், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கையூட்டி, சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
* பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, ஏன் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது?
தமிழகத்தின் இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், 1928-ம் ஆண்டு ‘ராமன் விளைவு’ என்ற அறிவியல் கோட்பாட்டை வரையறுத்தார். இதற்காக, அவருக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
* கண்டுபிடிப்புகளுக்கு உந்துகோலாக இருப்பது எது?
இந்த உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற கேள்விக்கு அறிவியல் மூலமாக விடைகாணும் போதுதான், ஆச்சரியமான கண்டுபிடிப்புகள் உருவாகின. இன்றும் உருவாக்கப்படுகின்றன. இனியும் உரு வாகும்.
* அறிவியல் தொழில்நுட்பம் நம்முடைய நாட்டிற்கு செய்திருக்கிற பங்களிப்பு என்ன?
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பல முன்னேற்றங்களை கண்டிருக்கிறது. விண்வெளி, அணு ஆற்றல் போன்ற துறைகளில் வளர்ச்சி கண்டிருப்பதோடு, உணவு, பால், பழங்கள், காய்கறிகள், மருந்துகள், தடுப்பூசிகள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற செய்திருக்கிறது.
பசுமைப்புரட்சியை மிகப்பெரிய அறிவியல் புரட்சி என்றே சொல்லலாம். 1947-ம் ஆண்டு 6 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தியை 1964-ம் ஆண்டு 12 மில்லியன் டன்னாக உயர்த்தி, 2018-ம் ஆண்டு நூறு மில்லியன் டன்னாக உயர செய்திருக்கிறது. அதேபோல வெண்மை புரட்சியின் மூலம் பால் உற்பத்தியில் நாம் உலகத்திற்கே சிறந்த உதாரணமாக திகழ்கிறோம்.
இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்று அழைக்கப்படுகிற அளவிற்கு, மருத்துவ துறையில் மிகப்பெரிய நிலையை எட்டியிருக்கிறது. இப்படி எல்லா துறைகளிலும், அறிவியல் தொழில்நுட்பத்தை நாம் சிறப்பாக பயன்படுத்தி வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.
* தேசிய வளர்ச்சிக்கு, அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாடு செய்திருக்கிற பங்களிப்புகள்?
உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்பதால், உலகம் போற்றும் பல விஞ்ஞானிகளை தமிழகம் உருவாக்கியிருக்கிறது. சர்.சி.வி.ராமன், ராமானுஜர், சுப்பிரமணிய சந்திரசேகர், அப்துல் கலாம், எம்.எஸ்.சுவாமிநாதன், தாமஸ் அனந்தராமன், ராமச்சந்திரன், வெங்கி ராமகிருஷ்ணன், சிவதாணு பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, ரவீந்திர கண்ணன், முகம்மத் ரேலா போன்ற பல தமிழ் விஞ்ஞானிகள் அறிவியல் உலகத்திற்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர். வருங்காலங்களிலும் வழங்குவர்.
* மூத்த ஆராய்ச்சியாளர்கள் என்ற முறையில் இளம் மாணவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன?
இளைஞர்கள் அறிவியல் பார்வையும், அறிவியல் அணுகு முறையும் எப்பொழுதுமே கொண்டிருக்க வேண்டும். இந்த நாட்டிற்கு தங்களுடைய கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சாமானிய மக்களுடைய பிரச்சினையை அணுகி அதற்கு தீர்வு தரக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். அதன் மூலம் வெற்றியாளர்களாக மாறுவதோடு மட்டுமில்லாமல் பல பிரச்சினைகளுக்கு தீர்வை உருவாக்க கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். ஒரு அறிவியல் அறிஞராக நீங்கள் மாறுவது என்பது உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.
அறிவியல் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சிக்கும் அரசு தரும் ஊக்கம் என்ன?
அறிவியல் அறிஞர்களை கவுரவிக்கும் வகையில், அரசு சார்பில் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆராய்ச்சி பணிகளுக்கு நிதி உதவியும் ஒதுக்கப்படுகின்றன. கல்லூரி பேராசிரியர்கள் வெளிநாடு சென்று ஆராய்ச்சி செய்ய, பயிற்சி பெறக்கூடிய அளவிற்கு நிதி வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும், ‘இன்ஸ்பயர்’ திட்டமும், கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ‘இளம் அறிவியல் அறிஞர்கள்’ திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. தமிழக அரசு மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் ஆராய்ச்சியாளர்களுக்கு, ‘டாக்டர் அப்துல் கலாம் விருது’ வழங்கி கவுரவிக்கிறது.
No comments:
Post a Comment