என்ஜினீயரிங் சார்ந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தாா்
ஆலோசனை கூட்டம்
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றாற்போல் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான கலந்தாலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் தொழில் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவினர், தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழில் முனைவோர், என்ஜினீயரிங் படிப்பில் தலைசிறந்த மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
பேராசிரியர்களுக்கு பயிற்சி
வேலைவாய்ப்பு தொடர்பான படிப்புகள் எது? என்றுதான் பலரும் தேடுகிறார்கள். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சி திறனை பெற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்குவதே இந்த கூட்டத்தின் நோக்கம்.
காலத்துக்கு, மாற்றத்துக்கு ஏற்ப கல்வித்திட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தோடுதான் தற்போது பாடத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படுகிறது. படித்து முடித்தவுடன் அவரவர் சார்ந்த தொழில்துறைகளில் பணிக்கு செல்வதற்கு முன்பு, அந்த மாணவர் படிக்கும்போதே அதற்கான திறனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிறகு, அது தொடர்பான பயிற்சியை முதலில் அனைத்து என்ஜினீயரிங் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும், தனித்தனியாக ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
அவர்கள் பயிற்சி பெற்றால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லித்தர முடியும்.
ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
உலகளவில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, ஆற்றல் திறன், தரப் பகுப்பாய்வு, மின்சார வாகனம் போன்ற துறைகளில் 21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இது சம்பந்தமான பாடத்திட்டத்தையும் என்ஜினீயரிங் சார்ந்த படிப்புகளில் கொண்டுவர வேண்டும். அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும்.
‘புத்தகத்தில் உலகத்தை பார்த்தால் அறிவு செழிக்கும்.
உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தளைக்கும்' என்று கலைஞர் சொல்வார். அந்த நோக்கத்தில்தான் இப்போது பாடத்திட்டம் மாற்றப்பட இருக்கிறது.
படிப்பறிவு பாடங்கள் மூலம் வருவது, பட்டறிவு என்பது செயல் மூலம் பெற்றுக்கொள்வது, பெரியார் சொன்ன பகுத்தறிவு உள்ளத்தில் இருந்து வருவது ஆகும். இதுவரை படிப்பறிவை மட்டுமே பாடத்திட்டங்கள் நோக்கி இருந்தது. எனவே இனிமேல் படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு ஆகியவை சேர்ந்துதான் ஒரு பாடத்திட்டம் அமைய வேண்டும் என்ற உணர்வோடுதான் இப்போது அதற்கான பணிகள் நடக்கிறது. இது முதல்-அமைச்சரின் கனவு.
பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கென்று தனிப்பாடத்திட்டம் உருவாக்குகிறார்கள். அவர்களையும் இதில் இணைத்து, அனைத்து என்ஜினீயரிங் சார்ந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவிடம் தெரிவித்திருக்கிறேன்.
அடிப்படையில் தேவைப்படும் பாடத்திட்டங்களை மாற்றாமல், காலத்துக்கு தேவையானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
6 மாதம் தொழில் பயிற்சித்திறன்
அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘4 வருட என்ஜினீயரிங் படிப்புகளில் கடைசி 6 மாதத்தில் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று தொழில் பயிற்சி திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தமிழக என்ஜினீயரிங் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை உலகளவில் தரம் உயர்த்துவோம்' என்றார்.
No comments:
Post a Comment