திருக்குறள் சேவை செய்யும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 2, 2022

திருக்குறள் சேவை செய்யும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்

ஈரடி குறளில் உலக தத்துவங்களை திருக்குறள் என்னும் நூலில் அற்புதமாக படைத்தவர் திருவள்ளுவர். உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைபெற செய்தவர். 


வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் இனம், மொழி, பாலின பேதமின்றி காலம் கடந்தும், பொருந்துவது போல் இன்றும் உள்ளது என்றால் அது மிகையல்ல. இத்தகைய திருக்குறளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் அற்புத பணியை செய்து வருகிறார், பாஸ்கரன். கடலூரை சேர்ந்தவரான இவர், திருக்குறள் மீது தீராத காதல் கொண்டவர். அதனால்தான் திருக்குறளை பல வழிகளில், கொண்டாடுகிறார்.


‘‘அனைவரும் வளம் பெற திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துகளே போதுமானது. இந்த அரிய கருத்துகளை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதே என்னுடைய பணி’’ என்று பொறுப்பாக பேசுபவர், கடலூர் முழுக்க இருக்கும் கல்லூரி, பள்ளிக்கூட சுவர்களில் திருக்குறளை எழுதியிருக்கிறார். இதன் மூலம் திருக்குறள் மாணவர்களையும், பொது மக்களையும் ஏதாவது ஒரு வழியில் நல்வழிபடுத்தும் என்பது இவரது கருத்தாக இருக்கிறது. ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவிலுள்ள தேவபாண்டலம் தான் எனது சொந்த ஊர். 


நான் சிதம்பரத்தில் பள்ளி படிப்பையும், வீட்டில் இருந்தபடியே கல்லூரி படிப்பையும் படித்து முடித்தேன். கடலூர் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலகத்தில் தணிக்கை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது எனக்கு வயது 74 ஆகிறது’’ என்றவர், ‘திருக்குறள் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது’ என்ற கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பள்ளியில் படிக்கும் போதே, தமிழ் மீது ஈர்ப்பு உண்டு. அதன் மூலம் திருக்குறள் படித்தேன். 


அதன் பொருளையும் அறிந்து கொண்டேன். கடந்த 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அதன் பிறகு நிறைய நேரம் இருந்தது. இதனால் நாம் கற்ற திருக்குறளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முடிவை எடுத்தேன். அதற்காக உலக திருக்குறள் பேரவையை உருவாக்கி, அதன் மூலம் திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன். பள்ளி-கல்லூரி சுவரில் திருக்குறள் எழுதுவது, திருக்குறள் சம்பந்தமான ஒப்புவித்தல் போட்டி, வினாடி-வினா போட்டிகளை நடத்துவது போன்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திருக்குறள் சேவை தொடர்கிறது. 


இதுவரை 50-ற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் இது போன்ற திருக்குறள் நிகழ்ச்சிகளை நடத்தி இருப்போம்’’ என்றவர், இலவசமாக திருக்குறள் புத்தகங்களையும் வழங்கி வருகிறார். ‘‘இதுவரை 15 ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திருக்குறள் ஸ்டிக்கர்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களின் வீட்டுக்கதவுகளிலும் அதை ஒட்ட வலியுறுத்துகிறோம். அந்தவகையில் இதுவரை 25 ஆயிரம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக திருமணம், பிறந்த நாள், கோவில் விழாக்களில் திருக்குறள் புத்தகங்கள், ஸ்டிக்கர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. என்னால் முடிந்தவரை திருக்குறளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும் பணியை தொடர்ந்து செய்வேன்’’ என்றார் ஆணித்தரமாக..!

No comments:

Post a Comment