பொதுத்தேர்வு எழுதும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்
கல்வித்துறை அறிவிப்பு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத உள்ள மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு அரசாணைகளில் கூறியிருப்பது போல, சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி, மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்க சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள்
பரிந்துரையின் பேரில், அத்தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்று தேர்வு எழுத இயலாதோர், பாரிச வாயு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எதிர்பாராத விபத்தினால் கைமுறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடுடையவர், நரம்பியல் குறைபாடுடையவர் ஆகியோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும்.
அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக 20 நிமிடம் ஈடுசெய் நேரம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விருப்பத்தின் பேரில் தங்களுக்கு தெரிந்தவர்களையோ அல்லது கல்வித்துறையால் நியமிக்கப்படும் நபரையோ சொல்வதை எழுதுபவராக, வினாத்தாள் வாசிப்பவராக, ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யக்கோரலாம். 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாத, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு வழங்கப்படும் நடைமுறையினை தொடர்ந்து பின்பற்றலாம். இதுபோன்ற சலுகைகளை பெற மாற்றுத்திறனாளிகள் அதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment