நம் உடலில் உலோகங்களால் ஏன் அலர்ஜி ஏற்படுத்துகிறது?
'மெட்டல் அலர்ஜி' எனும் உலோகத்தால் ஏற்படும் ஒவ்வாமையால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். உலோகங்கள் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதைக் குறித்து விளக்குகிறார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், தோல் மருத்துவத் துறையில் மூத்த ஆலோசகராக இருக்கும் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன்.
மெட்டல் அலர்ஜி எதனால் ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு, உலோகங்களுடன் ஏற்படுத்தும் ஒருவித எதிர்வினையால் தான் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்ப இதன் தன்மை மாறுபடும். மெட்டல் அலர்ஜியின் அறிகுறிகள் என்ன?
உலோகங்களால் ஏற்படும் அலர்ஜியின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இதை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். முதல் வகை, உடலின் மேல் தோலில் உலோகங்கள் உரசு
வதால் ஏற்படும் ஒவ்வாமை. அவ்வாறு உரசும் இடத்தில் அரிப்பு, தோல் சிவப்பாக மாறுதல், தோல் வீங்கிக் காணப்படுதல், சில நேரங்களில் வலி, எரிச்சல் ஏற்படக்கூடும். இரண்டாம் வகை, உடலின் உள்ளே பொருத்தப்படும் உலோகங்களான, கருத்தடை சாதனங்கள், இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்), கைகால் முறிவு ஏற்பட்ட பகுதியில் பொருத்தப்படும் உலோகத் தகடு போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை.
இதில் வெளியே எந்த அறிகுறியையும் காணமுடியாது. உடலுக்குள் நடக்கும் எதிர்வினையால், எப்போதும் சோர்வாக உணர்தல், ரத்தம் கசிதல், நடப்பதில் சிரமம், வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். எந்த வகை உலோகங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்? நிக்கல், கோபால்ட் மற்றும் குரோமியம் ஆகிய மூன்று வகையான உலோகங்களால் தான் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மூன்று உலோகங்களால் செய்த ஆபரணங்கள், கைக்கடிகாரம், மோதிரம், அணிகலன், ஆடைகளில் பொருத்தப்படும் மெட்டல் துகள்கள் கொண்ட ஒரு சில வடிவமைப்புகள், மொபைல் போன் உறை, இயர்போன்கள், மெட்டலால் ஆன சாவி போன்றவை தோலில் அடிக்கடி உரசும்போது ஒவ்வாமை ஏற்படலாம்.
அழகிற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சில கிரீம், டால்கம் பவுடர் போன்ற பொருட்களில் உலோக மூலக்கூறுகள் கலக்கப்படுவதால், அவற்றை உடம்பில் தடவும் இடத்தில் ஒவ்வாமை ஏற்படக்கூடும். எப்படி தற்காத்துக் கொள்ளலாம்? நிக்கல், கோபால்ட், குரோமியம் சேர்க்கப்படாத பொருட்கள், ஆபரணங்களை கவனமாகப் பார்த்து வாங்குங்கள். சில உலோகங்கள் பயன்படுத்தும்போது ஒவ்வாமையின் அறிகுறிகள் ஏற்பட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக செம்பு, ஸ்டேர்லின் வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள் அரிப்புத்தன்மையை உண்டாக்கும் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, கடல் உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்லும்போது 15 முதல் 30 வரை எஸ்.பி.எப் கொண்ட சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்தலாம். மருத்துவ முறைகள்: ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை ஏற்படுத்தும் உலோகத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment